Childrens Day 2022: இன்று குழந்தைகள் தினம்; வரலாறும் முக்கியத்துவமும் தெரிஞ்சுக்க இதை படிங்க மக்களே..
Children's Day 2022: குழந்தைகள் தின கொண்டாட்டத்தின் வரலாறு, முக்கியத்துவம் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
Children's Day 2022: நாடு முழுவதும் இன்று குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்தியாவில் குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14 அன்று இந்த தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீது நேரு மிகுந்த அன்புடன் இருப்பார். அவர் பிறந்தநாளை நினைவுகூரும் வகையிலும், குழந்தைகள் நலன், உரிமைகள் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் இந்த நாள் கொண்டாட்டப்பட்டு வருகிறது.
அவர் குழந்தைகள் மீது மிகவும் நேசம் கொண்டிருந்ததால், குழந்தைகள் அவரை நேரு மாமா (சாச்சா நேரு) என்று அன்புடன் அழைப்பார்கள். குழந்தைகள் தினம் என்பது குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் தேசிய விழா.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி பிறந்தார். இந்த ஆண்டு பண்டித ஜவஹர் லால் நேருவின் 133 வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஜவஹர்லால் நேரு குழந்தைகளை ஒரு நாட்டின் உண்மையான பலமாகவும், சமூகத்தின் அடித்தளமாகவும் கருதினார்.
குழந்தைகள் தின வரலாறு :
குழந்தைகள் தினம் உலக நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. 925 ஆம் ஆண்டு முதல் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டாலும், 1954 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி குழந்தைகள் தினத்தை கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இந்தியாவில் 1964 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு, நவம்பர் 14- ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட முடிவு எடுக்கப்பட்டது.
குழந்தைகள் தினத்தின் முக்கியத்துவம்:
நேருவின் பிறந்தநாள் என்பது மட்டுமில்லை, குழந்தைகளின் உரிமைகள், கல்வி மற்றும் நலனை முன்னிலைப்படுத்தும் நோக்கில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு அவர்களின் அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும் போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.
"இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள். அவர்களை நாம் கவனித்துக் கொள்ளும் விதம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.” என்று நேரு எப்போதும் சொல்வதுண்டு.
குழந்தைகளை கொண்டாடுவோம்:
”ஒரு செடியைப் பாதுகாக்கறதும் தண்ணி ஊத்தறதும்தான் நம்ம வேலை. அதிலே என்ன காய்க்கணும்ங்கறதும் எப்படிக் காய்க்கிறதுங்கறதும் நம்ம தீர்மானம் இல்லே.” - இப்படி சொல்வார் ஜெயகாந்தன். எவ்வளவு உண்மை. குழந்தைகள் ஆச்சரியங்களின் ஊற்று. பல காரணங்களால் நாம் பெரியவர்களாகியதும் நம்மில் உள்ள குழந்தைத்தனத்தைப் புதைத்துவிடுகிறோம். இந்த வாழ்வில் நம்மை உயிர்ப்போடு வைத்திருப்பவர்கள் குழந்தைகளே. அவர்களை அப்படியே ஏற்று கொள்வதுதான் நாம் அவர்களுக்கு செய்யும் நன்மை.
குழந்தைகளின் உலகம் சுவாரசியமானது. அதில் உங்களை தொலைத்திடப் பழகுங்கள். உங்கள் பிள்ளைகள் உங்களுக்கானவர்கள் அல்ல! அவர்கள் விரிந்த வானில் சிறகடித்து பிறக்கட்டும். அவர்கள் வீடடையும் கூடாக நீங்கள் இருங்கள்.
குழந்தைகள் தின பரிசுகள்:
குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப, அவர்களுக்கு பரிசளியுங்கள். கலரிங் புத்தங்கள், நல்ல புத்தங்கள், சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க உண்டியல் (Piggy bank), செடிகள் ஆகியவற்றை வழங்கலாம். நாம் அவர்களுக்கு அளிக்கும் பரிசுகள் பாலின பேதமின்றி இருக்கட்டும்.
நம் வாழ்வை கொண்டாட்டமாய் மாற்றும் குழந்தைகளை தினமும் கொண்டாடுவோம்!