ஆணவ படுகொலை.. தன்பாலின ஈர்ப்பு.. மார்பக வரி.. சாட்டையை சுழற்றிய இந்திய தலைமை நீதிபதி..!
குடும்பத்தின் விருப்பத்தை மீறி வேறு சாதியை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்வதால் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆணவப்படுகொலை செய்யப்படுகின்றனர் என இந்திய தலைமை நீதிபதி கவலை தெரிவித்துள்ளார்.
ஒருவரை காதலித்த காரணத்தால் படுகொலை செய்யப்படுவது எல்லாம் இந்தியாவில் மட்டும்தான் நிகழும். இப்போது எல்லாம் யார் சாதி பார்க்கின்றனர் என கேட்பவர்களுக்கு தினந்தோறும் ஆணவ படுகொலைகள் நிகழ்வது எப்படி தெரியாமல் இருக்கிறது என தெரியவில்லை. வேறு சாதியை சேர்ந்தவரை காதலித்த காரணத்திற்காக பெற்ற பிள்ளையை கொல்லும் போக்கு மனிதகுலத்திற்கு எதிரான செயல்.
ஆணவப்படுகொலை:
நாளுக்கு நாள் சாதிய ஆணவ படுகொலைகள் நிகழ்ந்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். குடும்பத்தின் விருப்பத்தை மீறி வேறு சாதியை சேர்ந்த ஒருவரை காதலிப்பதாலும் திருமணம் செய்து கொள்வதாலும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆணவப்படுகொலை செய்யப்படுகின்றனர் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.
தன்பாலின ஈர்ப்பை குற்றமாக்கிய இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377, மார்பக வரி, மும்பையில் மதுக்கூட நடனத்திற்கு தடை விதித்தது, திருமணம் மீறிய உறவு போன்ற அறநெறி தொடர்பான விவகாரங்கள் குறித்து பேசிய அவர், "எப்படி நடக்க வேண்டும், எது அறநெறி போன்ற விதிகளை ஆதிக்க சக்திகளே முடிவு செய்கின்றன" என்றார்.
அறநெறி:
'சட்டம் மற்றும் அறநெறி' என்ற தலைப்பில் உரையாற்றிய சந்திரசூட், "பலவீனமான விளிம்புநிலை மக்களுக்கு வேறு வழி இல்லாமல், பிழைப்பு நடத்துவதற்காக ஆதிக்க சக்திகளின் கலாசாரத்தை ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆதிக்க சக்திகள் அவமானப்படுத்துவிடுவார்களோ, ஒதுக்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில் எதிர் கலாசாரத்தை பலவீனமான மக்கள் முன்வைக்க முடியாமல் உள்ளனர்.
எதிர் கலாசாரத்தை பாதிப்புக்குள்ளாகக்கூடிய மக்கள் உருவாக்கினாலும், அதிகாரத்தில் உள்ளவர்கள் அதை தோற்கடித்து மேலும் அவர்களை அந்நியப்படுத்துகின்றனர். பாதிப்புக்குள்ளாக்கூடிய மக்கள் சமூக கட்டமைப்பின் அடிமட்டத்தில் வைக்கப்படுகின்றன. அதை அவர்கள் ஏற்று கொள்வதாக கூறுவது ஒரு கட்டுக்கதை. எனக்கு அறநெறியாக இருப்பது உங்களுக்கு அறநெறியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் உள்ளதா?" என்றார்.
ஆணவப்படுகொலை:
கடந்த 1991ஆம் ஆண்டு, உத்தர பிரதேசத்தில் 15 வயது சிறுமியை அவரது பெற்றோரே கொலை செய்த சம்பவம் குறித்து பேசிய அவர், "அந்தக் குற்றத்தை கிராம மக்களே ஏற்றுக்கொண்டனர். அவர்கள் வாழ்ந்த சமூகத்தில் இதுதான் அறம் எனக் கூறி அவர்கள் செயலை ஏற்று கொண்டனர். நியாயப்படுத்தினர்.
இதுதான், பகுத்தறிவு உள்ளவர்களால் முன்வைக்கப்பட்டிருக்கும் நடத்தை விதியா? இது பகுத்தறிவாளர்களால் முன்வைக்கப்பட்ட நடத்தை நெறிமுறை இல்லை என்றால்? ஒவ்வொரு ஆண்டும் பலர் காதலிப்பதற்காக அல்லது தங்கள் சாதிக்கு வெளியே திருமணம் செய்ததற்காக அல்லது தங்கள் குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டதாக கூறி கொல்லப்படுகிறார்கள்" என்றார்.
தன்பாலின ஈர்ப்பு:
தன்பாலின ஈர்ப்பை குற்றம் இல்லை என அறிவித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி பேசிய அவர், "அநீதியை சரி செய்தோம். இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 377, கடந்த காலத்தின் ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. தனிநபரின் உரிமைகளில் அரசியலமைப்பின் அறநெறி கவனம் செலுத்துகிறது. சமூகத்தின் பிரபலமான ஒழுக்கக் கருத்துக்களிலிருந்து அதைப் பாதுகாக்கிறது" என்றார்.
மும்பையில் பாம்பே வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்த அசோக் தேசாய் நினைவு கருத்தரங்கில் இந்த கருத்துகளை சந்திரசூட் தெரிவித்துள்ளார்.