Justice Chandrachud : வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு செவ்வாய் தோஷமா? ஆராய சொன்ன உயர் நீதிமன்றம்.. கொதித்த நீதிபதி சந்திரசூட்
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளிக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அப்பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா என கண்டறியும் அளவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சமீப காலமாக, சில நீதிபதிகள் சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் வழங்கி பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட தீர்ப்பைதான் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி வழங்கியுள்ளார். இது எந்தளவுக்கு மோசமான தீர்ப்பு என்றால், வெளிநாட்டில் இருக்கும் இந்திய தலைமை நீதிபதி தலையிட்டு அதை நிறுத்தி வைக்கும் அளவுக்கு விஷயம் சென்றுள்ளது.
அதிரடிகாட்டிய தலைமை நீதிபதி சந்திரசூட்:
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளிக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அப்பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா என கண்டறியும் அளவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சென்றுள்ளார். இது தொடர்பான தகவல் வெளிநாட்டில் உள்ள இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டுக்கு நேற்று கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து, இந்த விவகாரத்தை கவனித்தில் எடுத்து கொண்டு விசாரிப்பதற்காக உச்ச நீதிமன்ற அமர்வை அமைக்க பதிவாளருக்கு டி.ஒய். சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார். தலைமை நீதிபதியின் உத்தரவின் பேரில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதன்ஷு துலியா, பங்கஜ் மித்தல் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று மதியம் 3 மணிக்கு கூடி, அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.
நடந்தது என்ன?
திருமணம் செய்து கொள்வதாக கூறி, பெண் ஒருவரை அலகாபாத் பல்கலைக்கழக பேராசிரியர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதாகவும் அதனால் அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் குற்றவாளி பிணை மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த மே 23ஆம் தேதி, லக்னோ பல்கலைக்கழகத்தின் ஜோதிடத்துறை தலைவருக்கு, குற்றவாளியின் கூற்று உண்மையா என்பதைச் சரிபார்க்க, பெண்ணின் ஜாதகத்தை ஆய்வு செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜாதகத்தை சீலிடப்பட்ட உறையில் சமர்ப்பிக்குமாறு பெண்ணுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், ஒரு வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதிபதி இப்படிப்பட்ட தீர்ப்பு வழங்கியது பெரும் விவாத பொருளாக மாறிய நிலையில், இந்திய தலைமை நீதிபதியின் தலையீட்டால் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது.
முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அப்போது, இந்த உத்தரவு பற்றி கேள்விப்பட்டீர்களா என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மேத்தாவை நோக்கி கேட்டனர். அதற்கு பதில் அளித்த மேத்தா, "இதை நான் கவனித்தேன். மனதை உலுக்குகிறது. தயவு செய்து இந்த உத்தரவை நிறுத்தி வைக்குமாறு உங்கள் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இருதரப்பு ஒப்புதலுடன் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக தெரிவித்தார். இதை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்தனர். மேலும், வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.