காட்டுப்பன்றியிடம் சிக்கிய 11 வயது மகள்.. உயிரைக் கொடுத்து காப்பாற்றிய தாய்.. கண்ணீர் வரவழைத்த சம்பவம்..!
தாயின் அன்புக்கு நிகர் ஏதுமில்லை என்பதை உணர்த்தும் விதமாக ஒரு சம்பவம் சத்தீஸ்கரில் நடந்துள்ளது.
வெறுப்பு, சண்டை, போர், நெருக்கடி, பாகுபாடு என பல்வேறு காரணிகளால் உலகம் தத்தளித்து கொண்டிருக்கும் சூழலிலும் உலகத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவது அன்புதான். அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு ஒன்று இருக்க முடியும் என்றால் அது அன்புதான்.
தாயின் அன்பு:
அன்பு பல்வேறு விதமாக வெளிப்படும். நண்பர் மீது வைக்கப்படும் அன்பு, சகோதரி மீது செலுத்தப்படும் அன்பு, காதலன் மீதான அன்பு என பல்வேறு விதம் உள்ளது. ஆனால், அதற்கு எல்லாவற்றிக்கும் மேலாக கருதப்படும் அன்பு என்றால் அது தாய் செல்லும் அன்புதான்.
இப்படி, அனைவராலும் போற்றப்படும் தாய் செலுத்தும் அன்பு எப்படிப்பட்டது என்பதை உணர்த்தும் விதமாக ஒரு சம்பவம் சத்தீஸ்கரில் நடந்துள்ளது. கண் கலங்கும் விதமாக அந்த சம்பவம் அமைந்துள்ளது.
சத்தீஸ்கரில் நெகிழ்ச்சி:
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் தனது 11 வயது மகளைக் காப்பாற்ற துணிச்சல் மிக்க பெண் ஒருவர் காட்டுப்பன்றியை எதிர்த்து சண்டையிட்டுள்ளார். அவரது மகள் காயமின்றி தப்பித்தபோதிலும், அந்தப் பெண் மிருகத்துடன் நேருக்கு நேர் மோதியதில் பலத்த காயங்களால் உயிரிழந்தார்.
பாசன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெலியமர் கிராமத்தில் நேற்று இச்சம்பவம் நடந்துள்ளது. துவாஷியா பாய் (45) என்ற பெண்ணும் அவரது மகள் ரிங்கியும் மண் அள்ளுவதற்காக அருகிலுள்ள பண்ணைக்குச் சென்றுள்ளனர்.அந்த பெண் கோடாரியால் மண் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, காட்டுப்பன்றி ஒன்று திடீரென அங்கு வந்து அவரது மகளை நோக்கி சீறிப்பாய்ந்தது.
மகளை காப்பாற்றும் போராட்டத்தில் உயிரை கொடுத்த தாய்:
துவாஷியா தன் குழந்தையைக் காப்பாற்றும் முயற்சியில் கோடாரியால் மிருகத்தை எதிர்கொண்டாார். இந்த போராட்டத்தில், அந்தப் பெண் காட்டுப்பன்றியைக் கொன்றுள்ளார். ஆனால், அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில், அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து பாசன் வனத்துறை அதிகாரி ராம்நிவாஸ் தஹ்யாத் கூறுகையில், "சிறுமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வன விலங்கு தாக்கி உயிரிழந்ததால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடாக 25,000 ரூபாய் உடனடி நிவாரணமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள 5.75 லட்சம் ரூபாய் தேவையான சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு வழங்கப்படும்" என்றார்.
இதையும் படிக்க: Erode East By-Election Voting LIVE: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 1 மணி நிலவரப்படி 44.56% வாக்குகள் பதிவு.. கள நிலவரங்கள் உடனுக்குடன்...!