(Source: ECI/ABP News/ABP Majha)
சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்...சிக்கிய சிறுவன்...காவல்துறை எடுத்த நடவடிக்கை...நடந்தது என்ன?
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஒரு சிறுவன் உள்பட 8 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 10 ராணுவ வீரர்களும் ஓட்டுநர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய மாவோயிஸ்ட் தாக்குதல்:
தண்டேவாடா மாவட்டத்தின் அரண்பூர் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, மாவட்ட காவல் படையை (DRG) சேர்ந்த போலீசார் ஒரு வேனில் அங்கு சென்றனர். தேடுதல் வேட்டை முடிந்து அவர்கள் திரும்போதும் அரண்பூர் சாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐஇடி குண்டு வெடித்துள்ளது. இதில் 10 காவலர்கள், ஒரு வாகன ஓட்டி ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஒரு சிறுவன் உள்பட 8 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை மொத்தமாக 17 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேடுதல் வேட்டையில் சிக்கிய சிறுவன்:
மாவோயிஸ்ட் தாக்குதல் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் கைது நடவடிக்கை குறித்து விரிவாக பேசிய மூத்த காவல்துறை அதிகாரி, "இந்த எட்டு மாவோயிஸ்டுகளில், ஐந்து பேர் புதன்கிழமை (மே 17) கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில், சிறுவன் உட்பட மூன்று பேர் வெள்ளிக்கிழமை அரன்பூர் காவல் நிலையப் பகுதி மற்றும் அதை ஒட்டிய பகுதியில் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டனர்.
பெட்கா கிராமத்தைச் சேர்ந்த மாசா கவாசி, கோசா மாண்டவி, அர்ஜுன் குஞ்சம், தேவா மத்வி மற்றும் கங்கா மாத்வி ஆகியோர் புதன்கிழமை கைது செய்யப்பட்ட பின்னர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.
போலீஸ் காவல் முடிவடைந்த பின்னர், ஐந்து மாவோயிஸ்டுகள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாண்டி மாத்வி மற்றும் முயா கோவாசி ஆகிய இருவருடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தற்போது, ஏழு பேரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சிறுவன், சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளான்" என்றார்.
மாவோயிஸ்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டனர்:
முன்னதாக, மாவோயிஸ்ட் தாக்குதல் குறித்து பேசிய சத்தீஸ்கர் முதலமைச்சர் பாகேல், "ஜவான்களின் தியாகம் வீண் போகாது. நக்சலைட்டுகளுக்கு எதிரான போராட்டம் தீவிரப்படுத்தப்படும். நக்சலைட்டுகளுக்கு எதிராக முக்கிய பகுதிகளில் நமது வீரர்கள் கடும் சண்டையிட்டு வருகின்றனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில், நக்சலைட்டுகளின் மையப் பகுதிகளில் 75 முகாம்கள் (பாதுகாப்புப் படைகளின்) அமைக்கப்பட்டுள்ளன. முன்பு பாதுகாப்புப் பகுதிகளில் மட்டுமே முகாம்கள் அமைக்கப்பட்டன.
இப்போது, அரன்பூர் மற்றும் பைராம்கரில் இருந்து ஜாகர்குண்டாவுக்குச் செல்ல சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதால், சுக்மாவுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஹித்மாவின் (பயங்கர நக்சல் தளபதி) தலைமையகம் என்று அழைக்கப்படும் புவர்த்தி (பிஜப்பூர் மாவட்டத்தில்) இப்போது எல்லா பக்கங்களிலிருந்தும் (பாதுகாப்புப் படை முகாம்களால்) சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. மாவோயிஸ்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டனர்" என்றார்.