Budget Halwa: பட்ஜெட் அல்வா என்பது ஒரு செண்டிமெண்ட் - ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு மத்திய நிதியமைச்சர் பதில்!
Budget Halwa: பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் அல்வா தயாரிக்கும் நிகழ்வு குறித்து எம்.பி. ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் அல்வா தயாரிக்கும் நிகழ்வு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் விமர்சனம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் அல்வா தயாரிக்கும் நிகழ்வு
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு அல்வா தயாரிக்கும் நிகழ்வில்கூட தலித், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் இடம்பெறவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவையில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பேசிய ராகுல் காந்தி,” பட்ஜெட் தயாரிப்புகளில் 20 பேர் இடம்பெற்றனர். அதில் ஒருவர் மட்டுமே தலித்; ஒருவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். பட்ஜெட் அல்வா எல்லாரும் விநியோகிக்கப்பட்டது. ஆனால், நாட்டின் மக்கள் தொகையில் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் 73 சதவிகிதம் பேர் உள்ளனர். அவர்களுக்கு பட்ஜெட்டில் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அல்வா தயாரிக்கும் நிகழ்வில்கூட இவர்களுக்கு இடமில்லை” என்று விமர்சனம் செய்திருந்தார்.
எம்.பி. ராகுல் காந்தியின் கருத்திற்கு மக்களவை கூட்டத்தொடர் நிகழ்வில் பதிலளித்து பேசிய நிர்மலா சீதாரமன்,”பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பு அல்வா தயாரிப்பது என்பது பாரம்பரிய நிகழ்வாக வெகு காலமாக இருந்து வருகிறது. பட்ஜெட் மிண்ட்ரோ சாலையில் பிரிண்ட் எடுக்கப்படும் காலம் தொட்டு இது நீடித்துவரும் நிகழ்வு. முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விற்கு முன்பு இனிப்புடன் அதை தொடங்கும் இந்திய பாரம்பரியத்தின்படி, நிதிநிலை அறிக்கை தயாரிப்பவர்கள் அல்வா செய்து அனைவருக்கும் வழங்குவர்.
நிதித்துறையில் உள்ள அதிகாரிகளுக்கு அல்வா தயாரிப்பது என்பது ஓர் உணர்வுப்பூர்வமான ஒன்றாகும். அவர்கள் நிதிநிலை அறிக்கையின் தகவல்களை ரகசியமாக வைத்திருப்பதற்காக வெளியுலக தொடர்பு இன்றி தனிமைப்படுத்தப்பட்டு 4 நாட்களாக உழைக்கிறார்கள். அவர்களின் உணர்வுப்பூர்வமான நம்பும் ஒரு விசயத்தை எப்படி எளிதாக எடுத்துக்கொள்ள முடியும்?” என்று நிர்மலா சீதாராமன் எம்.பி. ராகுல் காந்திக்கு கேள்விவை முன்வைத்தார்.
”2023-2024-ம் ஆண்டில் இருந்து அல்வா தயாரிப்பது என்பது புகைப்படம் எடுக்கும் நிகழ்வாக மாறிவிட்டது. அப்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் இதே நிலைதான். அப்போது ஏன் அல்வா தயாரிக்கும் நிகழ்வை தடை செய்யவில்லை. ராகுல் காந்தியிடம் அதற்கான அதிகாரம் இருந்தும் ஏன் நிகழ்வை தடை செய்யவோ, பழங்குடியின, பட்டியலின பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினரை அல்வா தயாரிக்கும் நிகழ்வில் இடம்பெற செய்யவோ அவர் எதுவும் செய்யவில்லை” என்று நிர்மலா சீதாராமன் சாடியுள்ளார்.