Moon Minerals: நிலவில் சல்பர் இருப்பது உறுதி.. சந்திரயான்-3 மிரட்டல் கண்டுபிடிப்பு.. அசந்து போன உலக நாடுகள்
நிலவில் சல்பர் இருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், கடந்த மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு கடந்த 23ம் தேதி மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
நிலவில் சல்பர், ஆக்ஸிஜன் இருப்பது உறுதி:
நிலவை ஆராய்வதற்காக சந்திரயான் - 3 விண்கலத்தில் பல கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன. வெப்ப கடத்துத்திறன் மற்றும் வெப்பநிலையை தெரிந்து கொள்வதற்காக ChaSTE கருவியும் தரையிறங்கும் இடத்தை சுற்றி நில அதிர்வு தொடர்பாக ஆராய்வதற்காக ILSA கருவியும் மின் திறன் கொண்ட துகள்களை பற்றி ஆராய LP கருவியும் விக்ரம் லேண்டரில் அனுப்பப்பட்டுள்ளன.
அனுப்பப்பட்ட கருவிகளின் மூலம் நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோ, நிலவின் வெப்பநிலை தொடர்பான ஆய்வின் தகவல்களை
இஸ்ரோ வெளியிட்டு வரும் நிலையில், இன்று முக்கிய தகவல் ஒன்றை இஸ்ரோ பகிர்ந்துள்ளது.
இஸ்ரோவின் மிரட்டல் கண்டுபிடிப்பு:
நிலவில் சல்பர் இருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவில் கனிமம் இருப்பதை, ரோவரில் அனுப்பப்பட்ட லேசர் இன்டியூஸ்ட் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் (LIBS) கருவி கண்டுபிடித்துள்ளது. அதேபோல, எதிர்பார்த்தப்படியே, அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீஸ், சிலிக்கான், ஆக்ஸிஜன் உள்ளிட்ட வேதியியல் தனிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜனை (H) தேடும் பணி நடந்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 29, 2023
In-situ scientific experiments continue .....
Laser-Induced Breakdown Spectroscope (LIBS) instrument onboard the Rover unambiguously confirms the presence of Sulphur (S) in the lunar surface near the south pole, through first-ever in-situ measurements.… pic.twitter.com/vDQmByWcSL
மேல்குறிப்பிட்ட கனிமம் இருப்பதை கண்டுபிடிக்க உதவிய LIBS கருவி, பெங்களூருவில் உள்ள எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்களுக்கான ஆய்வகத்தில் (LEOS)/ISRO உருவாக்கப்பட்டது.
முன்னதாக, பல்வேறு பள்ளங்களில் பதிவான வெப்பநிலை மாறுபாடுகளை ரோவரில் அனுப்பப்பட்ட ChaSTE கருவி பதிவு செய்து வெளியிட்டது. 6 சக்கரம் கொண்ட 26 கிலோ எடையிலான பிரக்யான் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக பல்வேறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த ரோவரின் ஆய்வு நாட்கள் 14 நாட்கள் ஆகும். இந்த ரோவர் நிலவில் சுமார் 100 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை செல்லும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நொடிக்கு ஒரு சென்டி மீட்டர் தூரம் அளவிற்கு மட்டுமே இந்த ரோவர் பயணிக்கும். நிலவில் உள்ள நீராதாரம், கனிம வளங்கள், நிலவின் அமைப்பு, தோற்றம் மற்றும் நிலவின் வளிமண்டலம் என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது.