Shiv Shakti : நிலவின் ரகசியங்கள் என்னென்ன? சிவசக்தியை சுற்றி வலம் வரும் பிரக்யான் ரோவர்.. இஸ்ரோ வெளியிட்ட அசத்தல் அப்டேட்
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், கடந்த மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது.
தென்துருவத்தில் நிலவின் ரகசியங்களை ஆராயும் வகையில் பிரக்யான் ரோவர் வலம் வரும் காட்சிகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
சந்திரயான் 3 விண்கலம்:
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், கடந்த மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு கடந்த 23ம் தேதி மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய நான்காவது நாடு மற்றும் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
ரோவர் தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என பெயர் சூட்டிய பிரதமர்:
இதற்கிடையே, தென்னாப்ரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் மோடி நேராக இன்று காலை பெங்களூரு வந்தடைந்தார். தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, சந்திரயான் 3 தொடர்பான பல்வேறு தகவல்களை கேட்டு தெரிந்துகொண்டார். பின்பு ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பேசிய மோடி, இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கிய குறிப்பிட்ட நிலவின் மேற்பகுதி சிவசக்தி என அடையாளம் காணப்படும். சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்கிய ஆகஸ்ட் 23ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும். அதோடு, கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் பாகம் விழுந்து நொறுங்கிய பகுதி திரங்கா என அடையாளம் காணப்படும்” எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தென்துருவத்தில் நிலவின் ரகசியங்களை ஆராயும் வகையில் பிரக்யான் ரோவர் வலம் வரும் புதிய காட்சிகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 26, 2023
🔍What's new here?
Pragyan rover roams around Shiv Shakti Point in pursuit of lunar secrets at the South Pole 🌗! pic.twitter.com/1g5gQsgrjM
6 சக்கரம் கொண்ட 26 கிலோ எடையிலான இந்த ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக பல்வேறு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ரோவரின் ஆய்வு நாட்கள் 14 நாட்கள் ஆகும். இந்த ரோவர் நிலவில் சுமார் 100 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை செல்லும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நொடிக்கு ஒரு சென்டி மீட்டர் தூரம் அளவிற்கு மட்டுமே இந்த ரோவர் பயணிக்கும். அப்போது நிலவில் உள்ள நீராதாரம், கனிம வளங்கள், நிலவின் அமைப்பு, தோற்றம் மற்றும் நிலவின் வளிமண்டலம் என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆராயப்பட உள்ளன.