Chandrababu Naidu: சந்திரபாபு நாயுடுவுக்கு மேலும் நெருக்கடி.. ஆந்திரபிரதேச உயர் நீதிமன்றம் அதிரடி..!
முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறையின் நிதியை தவறுதலாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசக் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை அம்மாநிலத்தின் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் (சிஐடி) கடந்த 9ஆம் தேதி கைது செய்தனர்.
ஆந்திராவை உலுக்கிய சந்திரபாபு கைது:
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறையின் நிதியை தவறுதலாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. இச்சூழலில், தனக்கு எதிராக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு வழக்கு தொடர்ந்தார்.
ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம் அதிரடி:
இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவின் மனுவை அம்மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அவரின் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீனிவாஸ் ரெட்டி, "ஆவணங்களின் அடிப்படையில் பணத்தை செலுத்துவதற்கான அனுமதியை வழங்குவதையும் பணத்தை கையாடல் செய்வதையும் கடமையாக கருத முடியாது. தனிப்பட்ட நலனுக்காக பொது பணத்தை செலவிடுவதை அரசின் கடமையாக கருத முடியாது. எனவே, குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு அரசிடமிருந்து தகுந்த முன் அனுமதி கோருவது அவசியம் இல்லை" என தெரிவித்தார்.
வழக்கு பதிவு செய்யப்பட்ட 10 நாள்களில் விசாரணையில் தலையிட வேண்டாம் என நீதிமன்றத்திடம் மாநில அரசு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம், "இந்த வழக்கில் விசாரணை வேண்டும் என கோருவதற்கு குற்றம் சாட்டப்பட்டவரான சந்திரபாபு நாயுடுவுக்கு உரிமை இல்லை. அத்தகைய விசாரணை தேவையா இல்லையா என்பது ஒவ்வொரு வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்தது.
கடுமையான பொருளாதாரக் குற்றங்களில் குறிப்பாக, ஆரம்ப கட்ட விசாரணையின்போது அணுகுமுறை வேறுபட்டதாக இருக்க வேண்டும்" என தெரிவித்தது.
2 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்ட காவல்:
முன்னதாக, அவரின் காவல் இன்று நிறைவடைந்த நிலையில், விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றம் அவரின் காவலை மேலும் 2 நாள்களுக்கு நீட்டித்துள்ளது. சந்திரபாடு நாயுடுவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், காணொளி காட்சி வாயிலாக அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சந்திரபாபு சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக குடியரசு தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு தெலுகு தேசம் கட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. 1988 ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடு மீது ஏசிபி 120(பி), 166, 167, 418, 420, 465, 468, 201, 109, 34 மற்றும் 37 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: சட்டவிரோத கைது ஒன்றும் செய்யாது.."ஜெகன் மோகனை சீண்டும் ரஜினி... சந்திரபாபு நாயுடு மகனுக்கு ஆறுதல்!