New cooperative policy: விரைவில் புதிய கூட்டுறவுக்கொள்கை வெளியிடப்படும் - அமித் ஷா அடுக்கிய திட்டங்கள்!
விவசாயிகளுக்கு கடன் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், இரண்டு கிராமங்களுக்கு ஒரு வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை கொண்டு வரவுள்ளோம்
கூட்டுறவுத்துறையின் மேம்பாட்டிற்காக அரசின் புதிய கூட்டுறவுக்கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று அத்துறைக்கான அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தேசிய கூட்டுறவு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர்," இடைத்தரகர்களை ஒழித்து, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த கூட்டுறவு இயக்கங்கள் பெரிதும் உதவும். பால் கூட்டுறவு சங்கங்களை உதாரணமாக எடுத்துக் கூறிய அவர், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் தகுதி கூட்டுறவு இயக்கத்திற்கு உண்டு என்றார். மேலும், இந்திய சமூகத்தின் இயல்புடன் கூட்டுறவு இயக்கம் ஒத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
.2 லட்சம் கிரமாங்களில் வாழும் விவசாயிகளின் நன்மைக்காக 65,000 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இது போதுமானதாக இல்லை. விவசாயிகளுக்கு கடன் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், இரண்டு கிராமங்களுக்கு ஒரு வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை கொண்டு வரவுள்ளோம். அடுத்த, ஐந்து ஆண்டுகளில் 3 லட்சம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் செயல்படுத்தப்படும். இதன் மூலம், கடன், காப்பீடு, இடுபொருள் சந்தைப்படுத்துதல் மற்றும் விரிவாக்க செயல்பாடுகளை விவசாயிகளுக்கு வழங்க முடியும்" என்று தெரிவித்தார். மேலும், பல்வகை மாநில கூட்டுறவு சங்கங்களின் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்தார்.
புதிய கூட்டுறவுக் கொள்கை குறித்து யாரும் அச்சமுற தேவையில்லை என்று கூறிய அவர், "மத்திய அரசும், மாநிலங்களும் ஒன்றிணைந்துசெயல்பட்டு, ஒரு திட்டவட்டமான திசையில் நகரவேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் கலந்தாலோசிக்கப்படும். கூட்டுறவு கூட்டாட்சிவாதத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றும் வகையில் கொள்கை அமைக்கப்படும்" என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, மத்திய அரசின் அமைச்சரவையில் புதிதாக கூட்டுறவு அமைச்சகத்தை பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கினார் இந்த புதிய அமைச்சகம் கூட்டுறவு நிறுவனங்களுக்கான வணிகத்தை எளிதாக்குவதற்கும், மாநில கூட்டுறவு நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும், கூட்டுறவு இயக்கங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருவதால், அதில் மத்திய அரசின் தலையீடு அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்ற கருத்தை எதிர்க்கட்சிகள் தெரிவித்து வந்தனர்.
முன்னதாக, இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ் 1482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளையும், 58 பல மாநில கூட்டுறவு வங்கிகளையும் கொண்டு வருவதற்கான சட்டத்த்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த கூட்டுறவு வங்கிகளில் 8.6 கோடி டெபாசிட்தாரர்கள் உள்ளனர். மொத்த சேமிப்பு தொகை 4.85 லட்சம் கோடி ரூபாய். இந்த வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வருவதன் மூலம் டெபாசிட்தாரர்களின் பணத்திற்கு பாதுகாப்பு கிடைக்கும். அவசர சட்டம் குடியரசுத் தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு, தமிழ்நாட்டில், 128 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படும். கிராமப்புற வங்கிகள், விவசாய கூட்டுறவு வங்கிகள், இப்போதைக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்படாது. நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மட்டுமே இந்திய ரிசர்வ் வங்கியின் நேரடி மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.