ECRP-II: கொரோனா சுகாதார கட்டமைப்பு நிதியை மாநில அரசுகள்தான் பயன்படுத்தவில்லை - மத்திய அரசு தகவல்
அதிகபட்சமாக தமிழ்நாடு அரசு தனது வழங்கப்பட்ட மத்தியப் பங்கில், 81.46% நிதியை செலவழித்துள்ளது.
கொரோனா அவசரகால நடவடிக்கை மற்றும் சுகாதார தயார்நிலை 2-ம் கட்ட நிதியுதவி (இசிஆர்பி-2) திட்டத்தின் கீழ் மத்திய அரசு 26.14 சதவீத நிதியை மட்டும் விடுவித்தது என்பது தவறான தகவல் என மத்திய சுகாதாரத் துறை அமைசகம் விளக்கமளித்துள்ளது.
நோய்களை விரைந்து தடுத்தல், கண்டறிதல் மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் உடனடி செயல்பாடுகளுக்காக சுகாதார அமைப்பின் தயார்நிலையை மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. குழந்தைகள் நலம் உள்ளிட்ட சுகாதார உள்கட்டமைப்பின் மேம்பாடு மற்றும் அளவிடக்கூடிய வெளிப்பாடுகள் மீது இது கவனம் செலுத்தும்.
இந்நிலையில், சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவிட்-19 அவசரகால நடவடிக்கை மற்றும் சுகாதார தயார்நிலை 2-ம் கட்ட நிதியுதவி (இசிஆர்பி-2) திட்டத்தின் கீழ் மத்திய அரசு 26.14 சதவீத நிதியை மட்டும் விடுவித்தது என ஒரு செய்தி சேனல் சமீபத்தில் கூறியது. மேலும், அந்த சேனல் 2021 நவம்பர் வரை மத்திய அரசு நிதியை விடுவித்தது எனவும், அதில் 60 சதவீத தொகையை மாநிலங்கள் பயன்படுத்தியதாகவும் கூறியது. இது தவறான தகவல்.
இசிஆர்பி-2 திட்ட நிதியுதவி-ன் கீழ் ரூ.23,123 கோடி நிதிக்கு மத்திய அமைச்சரவை 2021 ஜூலை 8ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதில் ரூ.15,000 கோடி மத்திய அரசின் பங்கு, மாநில அரசின் பங்கு ரூ.8,123 கோடி. இதை 2021 ஜூலை முதல் வரும் 2022 மார்ச் 31ம் தேதி வரை அமல்படுத்த வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் ரூ.20,308.70 கோடி மாநிலங்களால் செலவழிக்கப்படவுள்ளது. இதில் ரூ.12,185.70 கோடி மத்திய அரசின் பங்கு. ரூ.8,123 கோடியை மாநில அரசுகள் வழங்க வேண்டும். மத்திய அரசு ரூ.6075.85 கோடியை, ( அதாவது, மத்திய பங்கில் 50 சதவீத தொகை) தேசிய சுகாதார திட்டத்தின் மூலம் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 2021 ஆகஸ்ட் 24ம் தேதிக்குள் வழங்கிவிட்டது.
இசிஆர்பி-2 திட்டத்தின் கீழ் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதுவரை ரூ.1,679.05 கோடியை செலவழித்துள்ளன. இவற்றின் விவரங்களை மேலே காணலாம்.
இவ்வாறு, மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மத்திய பங்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிதியில் (ரூ.6075.85 கோடியில்), வெறும் 27.13% மட்டுமே மாநிலங்கள் செலவழித்துள்ளன. இத்திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக, மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் வெறும் 19.42% நிதியை மட்டுமே செலவழித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு அதிகபட்சமாக 81.46% நிதியை செலவழித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்