HPV Vaccine : பள்ளி சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் மத்திய அரசு திட்டம்.. தொடரும் தடங்கலுக்கு காரணம் என்ன?
HPV Vaccine in Schools : முதலில் 10 முதல் 14 வயது சிறுமிகளுக்கும் பின்னர், 9 வயது சிறுமிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என கூறப்பட்டது. ஆனால், இன்று வரை பள்ளி சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படவில்லை.
HPV Vacccine In Schools : உலகளவில் பெண்கள் மத்தியில் அதிக அளவில் ஏற்படும் நான்காவது புற்றுநோயாக கருப்பை வாய் புற்றுநோய் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, பெண்களை அதிக அளவில் பாதிக்கும் இரண்டாவது புற்றுநோயாக கருப்பை வாய் புற்றுநோய் உள்ளது. உலகளவில் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள்தான்.
பெண்களை அச்சுறுத்தும் கருப்பை வாய் புற்றுநோய்:
அதேபோல, உலகளவில் கருப்பை வாய் புற்றுநோயால் நடக்கும் நான்கு உயிரிழப்புகளில் ஒரு உயிரிழப்பு இந்தியாவில் நிகழ்கிறது. கருப்பை வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து திறம்பட சிகிச்சை அளித்தால் அதை தடுக்கலாம். குணப்படுத்தலாம். பெரும்பாலான நேரங்களில் இந்த புற்றுநோய், ஹ்யூமன் பாப்பிலோமா வைரஸால்தான் ஏற்படுகிறது.
இந்த வைரஸ் தாக்கப்படுவதற்கு முன்பே, HPV தடுப்பூசியை செலுத்தினால், இந்த புற்றுநோயை தடுக்கலாம். கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க பள்ளிகளில் 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கடந்தாண்டு தகவல் வெளியானது.
உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் ஹ்யூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசியை வழங்க தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை வழங்கியிருந்தது. இதையடுத்து, கடந்த 2023ஆம் ஆண்டின் மத்திக்குள் சிறுமிகளுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செர்வாவாக் தடுப்பூசி செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்த இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலும் ஒப்புதல் வழங்கியது.
மத்திய அரசு திட்டத்துக்கு தொடர் தடங்கல்:
அந்த வகையில், பொது சுகாதாரத் திட்டத்தில் தடுப்பூசியை பயன்படுத்த தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அங்கீகாரம் வழங்கியது. முதலில் 10 முதல் 14 வயது சிறுமிகளுக்கும் பின்னர், 9 வயது சிறுமிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என கூறப்பட்டது. ஆனால், இன்று வரை பள்ளி சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில், இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. பள்ளி சிறுமிகளுக்கு ஹ்யூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி திட்டத்தை தொடங்குவது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை என தெரிவித்துள்ளது.
பெண் குழந்தைகளின் சேர்க்கை அதிகமாக இருப்பதால், ஆரம்ப பள்ளிகள் மூலம் தடுப்பூசிகள் வழங்க திட்டமிடப்பட்டது. தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட நாளில் பள்ளிக்குச் செல்ல முடியாத சிறுமிகளுக்கு சுகாதார நிலையத்தில் தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டது. பள்ளியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட சிறுமிகளுக்கு அவர்களின் வீட்டிற்கு சென்று தடுப்பூசி போடவும் திட்டமிட்டது.
ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி செலுத்தி அமெரிக்க நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இந்த சோதனை முயற்சியில் தடுப்பூசி செலுத்தி கொண்ட சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் சிலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, தடுப்பூசி சோதனை முயற்சியில் முறைகேடு நடந்திருப்பதாக சுகாதாரத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை சமர்பித்தது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து, தடுப்பூசி திட்டத்திற்கு எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.