Central Govt Warning: ”போராட்டத்திற்கு சென்றால் சம்பளம் குறைக்கப்படும்” - மத்திய அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை.. பழைய ஓய்வூதிய திட்டம் கோரி பேரணி
பழைய ஓய்வூதியம் கோரி டெல்லியில் இன்று நடைபெறும் பேரணியில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு, எதிராக கடும் நடவடிக்கை எடுகிகப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர் சங்கங்கள் டெல்லியில் இன்று பேரணி நடத்த உள்ளனர்.
மத்திய அரசு எச்சரிக்கை:
பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள உத்தரவில், "அரசு ஊழியர்கள் போராட்டம் உட்பட எந்த வடிவிலான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இது ஊதியக் குறைப்பு தவிர, தகுந்த ஒழுங்கு நடவடிக்கையும் அடங்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லியில் பேரணி:
டெல்லி ராம்லீலா மைதானத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் சங்கங்கள் பேரணிநடத்த உள்ளன. இன்று நடைபெற உள்ள இந்த பேரணியை, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதற்கான கூட்டு அமைப்பு/தேசிய கூட்டு நடவடிக்கை கவுன்சில் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதற்கான கூட்டு அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இந்திய ரயில்வே ஆண்களுக்கான பெடரேசன் பொது செயலாளர் ஷிவ் கோபால் மிஷ்ரா கூறுகையில் ''2014-ம் ஆண்டு ஜனவரி 1-ல் இருந்து புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு, அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பழைய ஓய்வூதியம் திட்டத்தில் இருந்து புதிய ஓய்வூதியத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால், எதிர்காலம் குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள். லட்சக்கணக்கான ஊழியர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாங்கள் இந்த கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். இத்ல் மத்திய, மாநில, ரயில்வே, ஆசியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் என லட்சக்கணக்கானோர் பேரணியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்” என தெரிவித்தார். இந்நிலையில் தான், போராட்டம், பேரணி உள்ளிட்ட எந்தவிதமான வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டாலும், ஊதியம் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம் பிரச்னை:
கடந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி நிலவரப்படி, 30.13 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது என்பது முக்கிய தேர்தல் பிரச்சினை. புதிய ஓய்வூதிய திட்டம் என்பது அரசாங்கத்தின் பங்களிப்புடன் ஒத்துப்போகும் ஒரு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும், மேலும் இது சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் என்பது பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வாழ்நாள் முழுவதும் வருமானம், அதாவது பணியின் போது கடைசியாக பெறப்பட்ட ஊதியத்தில் 50 சதவிகிதம் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியமாக வழங்கப்படும். 2004ம் ஆண்டுக்குப் பின் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் கட்டாயமாக புதிஅ ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கப்படுகின்றனர். கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வரை 23 லட்சத்து 65 ஆயிரத்து 693 மத்திய அரசு ஊழியர்களும், 60 லட்சத்து 32 ஆயிரத்து 768 மாநில அரசு ஊழியர்களும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.