44 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஆர்டர் செய்தது மத்திய அரசு !
நேற்று மாற்றிய தடுப்பூசி கொள்கைக்கு ஏதுவாக புதிதாக 44 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை சற்று குறைய தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் நேற்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று இன்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்தத் திட்டம் வரும் 21-ஆம் தேதி முதல் இந்தியாவில் தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். மத்திய அரசின் இந்த முடிவை பல மாநிலங்கள் வரவேற்றன. இந்நிலையில் புதிய தடுப்பூசி கொள்கை அறிவித்ததன் தொடர்ச்சியாக தற்போது மத்திய அரசு 44 கோடி தடுப்பூசிகளுக்கு புதிதாக ஆர்டர் செய்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி புதிதாக 25 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகளும், 19 கோடி கோவேக்சின் தடுப்பூசிகளையும் மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது. இந்தத் தடுப்பூசிகள் ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதங்களுக்குள் கிடைக்கும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இவற்றில் முதல் தவனையாக 30 சதவிகிதம் தடுப்பூசிகளை வழங்க செரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடேக் நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் தடுப்பூசி செலுத்த தொடங்கியது முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் மத்திய அரசு உதவி வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார். அத்துடன் மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று தடுப்பூசி வாங்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது அதை மீண்டும் மத்திய அரசே வழங்க முடிவு எடுத்துள்ளது என்று அதிகாரி தெரிவித்தார்.
தற்போது மத்திய அரசின் எண்ணம் விரைவாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதுதான். அதற்காக தான் மத்திய அரசு தடுப்பூசி கொள்கையில் மாற்றம் கொண்டு வந்ததாகவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 75 சதவிகிதம் போக மீதமுள்ள 25 சதவிகிதத்தை தனியார் மருத்துவமனைகள் வாங்கி செலுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகளுக்கு சேவை கட்டணமாக கூடுதலாக 150 ரூபாய் வரை மட்டுமே தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இவை தவிர ஏற்கெனவே கடந்த வாரம் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு தடுப்பூசி தருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்திருந்தார். எனவே இவை அனைத்தையும் வைத்து மத்திய அரசு இந்தியாவில் நிலவி வரும் தடுப்பூசி பற்றாக்குறையை சரி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நேற்று பேசிய பிரதமர் மோடி, "இந்தாண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். அத்துடன் கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக பிரதம மந்திரி கரிப் கல்யாண் திட்டம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு 8 மாதங்கள் வரை நிதியுதவி அளிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தற்போது மீண்டும் நவம்பர் மாதம் வரை நியாயவிலை கடைகளில் 80 கோடி ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் அளிக்கப்படும்” என்று கூறினார்.
மேலும் படிக்க: பழங்குடியின மாணவர்களுக்கு 14 கி.மீ நடந்துசென்று பாடம்புகட்டும் கேரள அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!