ஒமிக்ரான் வைரஸ் - வருகிறதா ஊரடங்கு.... மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சொல்வது என்ன?
தேவையானால் இரவு நேர ஊரடங்கைத் அமல்படுத்தலாம். அதேபோல் அத்களவு மக்கள் கூடும் கூட்டங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் - மத்திய அரசு
கொரோனா தொற்று சற்று ஓய்ந்ததை அடுத்து தற்போது ஒமிக்ரான் வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸானது தற்போது பல நாடுகளில் பரவிவிட்டது.
இந்தியாவில் இதுவரை 13 மாநிலங்களில் மொத்தம் 202 பேருக்கு ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது. இந்த சூழலில் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஒமிக்ரான் வைரஸ் கட்டுப்பாடுகள் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில், “ நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணித்தலை தீவிரப்படுத்த வேண்டும். தேவையானால் இரவு நேர ஊரடங்கைத் அமல்படுத்தலாம். அதேபோல் அத்களவு மக்கள் கூடும் கூட்டங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.
அவசர நிதியைப் பயன்படுத்தி மருத்துவ கட்டுமானங்களை மேம்படுத்த வேண்டும். தேவையான அளவு படுக்கைகள், ஆம்புலன்ஸ், ஆக்ஸிஜன் உபகரணங்கள் உள்ளனவா என்பதை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். கொரோனா தொற்றால் பாதித்தோர் உள்ள பகுதியில் பரிசோதனை, கண்காணிப்பின் ஒரு பகுதியாக வீடு வீடாக சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு ஒமிக்ரான் தொற்று இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஒமிக்ரான் வைரஸ் டெல்டாவைவிட மூன்று மடங்கு அதிகமாகப் பரவக்கூடியது என்பதால் வார் ரூம்களை தயாராக வைக்க வேண்டும். கொரோனா குறித்தான புள்ளி விவரங்களை மாவட்ட அளவில் சேமிக்க வேண்டும். சேமிக்கப்படும் விவரங்கள் பிழை இல்லாமல் துல்லியமானதாக இருக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் அறிக்கையின்படி, ஒமிக்ரான் மாறுபாடு மனித சுவாசக் குழாயை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய தகவலை வழங்கும் முதல் ஆய்வு இதுவாகும். ஒமிக்ரான் மாறுபாடு டெல்டா மாறுபாட்டை விட வேகமாகப் பரவுகிறது மற்றும் மனித மூச்சுக்குழாயில் உள்ள அசல் SARS-CoV-2 வைரஸை விட வேகமாக பெருகும் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2007-ஆம் ஆண்டு முதல் வளர்ந்து வரும் வைரஸ் தொற்றுகளை ஆராய்வதற்கு சுவாசக் குழாயின் எக்ஸ் விவோவை (உயிருள்ள உடலுக்கு வெளியே) , ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர். Ex vivo என்பது ஒரு உறுப்பு, உயிரணு அல்லது திசுக்களை உயிருடன் எடுக்கப்படும் மருத்துவ நடைமுறையின் ஒரு பகுதியாகும்.
சோதனை மாதிரியைப் பயன்படுத்தி, டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகைகளால் மனித மூச்சுக்குழாய்களில் ஏற்படும் தொற்றுநோயை ஒப்பிட்டுப் பார்த்தனர். அப்போது ஒமிக்ரான், டெல்டா வைரஸைவிட 70 மடங்கு அதிகமாக பரவுவதை சோதனை தொடங்கப்பட்ட 24 மணிநேரத்தில் உறுதிப்படுத்தினர். அதேசமயம், மனித நுரையீரல் திசுக்களில், ஒமிக்ரானின் செயல்பாடு SARS-CoV-2 வைரஸைக் காட்டிலும் குறைவான செயல்திறன் கொண்டதாக (10 மடங்கு) கண்டறியப்பட்டது.
ஆய்வின் முதன்மை ஆசிரியரான டாக்டர் மைக்கேல் சான் சி-வாய் கூறுகையில், இது உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சீர்குலைவுக்கு வழிவகுக்கும் என்றார். அவர் மேலும் கூறுகையில், மிகவும் தொற்றுநோயான வைரஸ் அதிகமான மக்களைப் பாதித்து மிகவும் கடுமையான நோயையும் மரணத்தையும் ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: