(Source: ECI/ABP News/ABP Majha)
CDS Bipin Rawat Demise: பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு வீரவணக்கம் செலுத்திய தமிழக முதல்வர்....
13 பேரின் உடல்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
ஹெலிஹாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மவுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில், அடர் பனிமூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளானது. ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்த நிலையில், காட்டேரி என்ற இடத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த நிலையில் பல்வேறு நபர்கள் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி, 13 பேர் உயிரிழந்தனர்.
அதில், முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி முதுலிகா ராவத், ராணுவ வீரர்கள் லிட்டெர், ஹர்ஜிந்தர் சிங், குருசேவாக் சிங், ஜிதேந்தர் குமார், விவேக் குமார், சாய் தேஜா, சாத்பால், சவுஹான், குல்தீப், பிரதீப், தாஸ் ஆகிய 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் மட்டும் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
இதனிடையே விபத்துக்கான காரணமாக வானிலையும் தொழில்நுட்ப கோளாறும் சொல்லப்படுகிறது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்காது என விமானத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். கறுப்புப்பெட்டி கிடைத்தால் தான் விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும் என கூறிவந்த நிலையில், தற்போது கறுப்பு பெட்டி கண்டறியப்பட்டுள்ளது. அதை பெங்களூர் அல்லது டெல்லிக்கு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீலகிரி லெவிங்டனில் 13 பேரின் உடல்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன. அங்கு 13 பேரின் உடல்களுக்கு ராணுவ மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு தலைவர்கள் இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியும் தனது இரங்கலை பதிவு செய்தார்.
அவரைத்தொடர்ந்து தமிழக முன்னாள் பாஜக தலைவரும் தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் 13 பேர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதனிடையே இந்த விபத்து குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “விசாரணையானது ஏர் மார்ஷல் மனவேந்திர சிங் தலைமையில் நடைபெறும். விசாரணை குழு நேற்றே வெல்லிங்டன் சென்று விசாரணையை தொடங்கிவிட்டது.
கோயம்புத்தூர் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை 11.48 மணிக்கு Mi-17 V5 ஹெலிகாப்டர் வெலிங்டன் புறப்பட்டது. மதியம் 12.15 மணிக்கு வெலிங்டனில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 12.08 மணியளவில் சூலூர் விமானப்படை கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு, வெலிங்டனில் தரையிறங்குவதற்கு 7 நிமிடங்களுக்கு முன்னர் குன்னூர் கட்டுப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு விரைந்து பின்னர் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்