Cauvery Water: தமிழ்நாட்டிற்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று ஆணையம் பரிந்துரை?
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் இன்று அதாவது ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற்றது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் இன்று அதாவது ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இரு மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர். காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கர்நாடக அரசு தரப்பில் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவுக்கு மத்தியில் நீண்ட நாடகளாக இருந்த பிரச்னைக்கு தீர்வாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு தமிழ்நாட்டிக்கு கர்நாடக அரசு கட்டாயம் 419 டி.எம்.சி தண்ணீர் திறந்து விடவேண்டும்.
ஆனால் இந்த ஆண்டு போதிய மழைப்பொழிவு இல்லை எனக்கூறி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நீரை வழங்காமல் உள்ளது. அண்மையில் கர்நாடகாவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்ற பின்னர் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. அதேபோல் இதற்கு முன்னர் பாஜக ஆட்சியில் இருந்தது. இரண்டு கட்சிகளும் தமிழ்நாட்டிற்கு நீர் வழங்குவதில்லை என்ற கொள்கையில் மிகவும் உறுதியாக உள்ளன. காவிரி மேலாண்மை ஆணையம் கொடுத்த அழுத்தத்தின் பேரிலும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்ததின் பொயரால் தண்ணீர் திறந்து விட துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் ஆகஸ்ட் 15ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னர் கர்நாடக பாஜக தலைவர் பசவராஜ் பொம்மை தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கவேண்டாம் எனவும், தண்ணீர் வழஙக மாட்டேன் என டி.கே. சிவக்குமார் உறுதியாக உள்ளதையும் பாராட்டி கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை காக்க தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு தேவையான நீர் கிடைக்காததால், காவிரி ஒழுங்காற்று ஆணையம் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இதில், தமிழ்நாடு அரசு சார்பில் விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்தது. ஆனால் கார்நாடக அரசு தரப்பில் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர்தான் திறந்து விட முடியும் என தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் கர்நாடக அரசு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடிநீர் திறந்து விட காவிரி ஒழுங்காற்று ஆணையம் காவிரி மேலாண்மை ஆணையதிற்கு பரிந்துரைத்துள்ளது. ஆனால் இந்த நீர் தமிழ்நாட்டிற்கு போதுமானதாக இருக்காது என்பதால், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளதாக கூறப்படுகிறது.