Kerala Trekker Case: மீட்டது சூப்பர்தான்.. ஆனால் செலவு 75 லட்சம்..! தடையை மீறி மீண்டும் மலையேறும் கும்பல்!
48 மணி நேரமாக போராடிய ராணுவத்தினர், பாபுவை பத்திரமாக மீட்டு வர 75 லட்சம் வரை செலவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம் மலம்புழா பகுதியின் செங்குத்து மலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டபோது சிக்கிக்கொண்ட இளைஞர் பாபுவை இராணுவத்தினர் மீட்டு வந்த சம்பவம் வைரலானது. இந்நிலையில், தடை செய்யப்பட்ட இடத்தில் மலையேற்றம் செய்ததற்காக பாபு, அவரது நண்பர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே அப்பகுதியில் மலையேற்றம் செய்ய போலீசார் தடை விதித்டுள்ளனர். ஆனாலும் மீண்டும் மீண்டும் அப்பகுதியில் சிலர் தடையை மீறி மலையேற்றம் செய்ய முயற்சிப்பதால் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் மலையேற முயற்சி செய்த சிலரை தடுத்தி நிறுத்திய போலீசார் எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.
மலையில் சிக்கிக்கொண்ட இளைஞர்
மலம்புழா, சேரடு பகுதியைச் சேர்ந்த ஆர்.பாபு (23) என்பவர், கடந்த திங்கட்கிழமை மதிய வேளையில் எலிச்சிரம் அருகே உள்ள குரும்பாச்சி மலையில் தனது மூன்று நண்பர்களுடன் மலையேறினார். மலையேற்றம் செய்து கொண்டிருந்த போது, களைத்துப் போன பாபு பிளவில் தவறி கீழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்ததில் பாபுவின் காலில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு கொடிகள் மற்றும் குச்சிகளை பயன்படுத்தி பாபுவை மீட்க நண்பர்கள் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இதையடுத்து, பாபுவின் நண்பர்கள் மலையிலிருந்து இறங்கி, அப்பகுதி மக்களுக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். ஒரு நாளுக்கும் மேலாக மலையில் சிக்கி தவித்த பாபுவை மீட்க இராணுவம் விரைந்தது. 45 மணி நேரமாக மலைமுகட்டில் சிக்கி உணவு, தண்ணீரின்றி போராடி வந்தவரை கண்டுபிடித்து உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து, பிறகு மலையேறும் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் மூலம் மீட்டுள்ளனர்.
48 மணி நேரமாக போராடிய ராணுவத்தினர், பாபுவை பத்திரமாக மீட்டு வர 75 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். ஒரு வழியாக அவரை மீட்டு வந்த ராணுவத்திற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தது.
பாபு மீது வழக்குப்பதிவு:
இந்நிலையில், தடை செய்யப்பட்ட பகுதியில் மலையேற்றம் செய்ததற்காக பாபு, அவரது நண்பர்கள் மீது கேரள வனச்சட்டம், 1961, பிரிவு 27-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பிரிவின் கீழ், வழக்குப்பதிவு செயப்படும்போது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.25,000 அபராதம் விதிக்கப்படலாம் என தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இது போன்ற தடை செய்யப்பட்ட பகுதிகளில் மலையேற்றம் மேற்கொள்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே சசிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்