Watch Video: எதுக்கு இந்த வெட்டி வேலை..? பரபரப்பான டிராஃபிக்கில் வாகன ஓட்டிகளை கடுப்பேற்றிய கார்..!
பெங்களூரின் பரபரப்பான சாலையில் கார் ஓட்டுனர் செய்த காரியத்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
தமிழில் திணை விதைத்தவன் திணை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று ஒரு பழமொழி உண்டு. அதன் பொருள் நாம் அனைவரும் அறிந்ததே. ஒருவன் தான் செய்யும் செயலுக்கு ஏற்ப அதன் பலன்களை அனுபவிப்பான் என்பதே அதன் பொருள். சிலர் அதற்கான பலனை தாமதமாக அனுபவிப்பார்கள். சிலர் உடனே அனுபவிப்பார்கள். இதை நாம் பல முறை கண்கூடாக பார்த்திருப்போம். அப்படி ஒரு சம்பவம்தாான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீண்வேலை பார்த்த கார் ஓட்டுநர்:
நாட்டின் பரப்பான நகரங்களில் ஒன்று பெங்களூர். தற்போது நாட்டிலே போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நகரமாக பெங்களூர் மாறி வருகிறது. இதனால், பெங்களூரின் சாலைகள் எப்போதும் வாகனங்கள் அணி வகுப்பால் போக்குவரத்து நெருக்கடியாகவே காணப்படும். போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுவது மட்டுமே தேவையற்ற போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு ஒரே வழி ஆகும் .
பெங்களூரில் உள்ள பரபரப்பான சாலை ஒன்று ஒரு பக்கம் வாகனங்கள் செல்லவும், அதேசாலையின் மறுபுறம் வாகனங்கள் வரவும் ஏற்றாற்போல அமைக்கப்பட்டுள்ளது. கார்கள், இருசக்கர வாகனங்கள் செல்லும்போது மித வேகத்தில் அந்த சாலையில் சென்றாலும், பேருந்துகள் போன்ற கனரக வாகனங்கள் வரும்போது மிகவும் நிதானமாக மட்டுமே அந்த சாலையில் செல்ல முடியும்.
இந்த நிலையில், பள்ளி பேருந்து ஒன்று அந்த சாலையில் எதிர்திசையில் வந்து கொண்டிருந்தது.
Most of the jams are due to people driving like the rest of those waiting are fools! #Bengaluru #varthurjam pic.twitter.com/FIbHVZ82hU
— MahiTwiets (@mahitwietshere) July 22, 2023
அந்த பேருந்து செல்வதற்காக மறுபுறத்தில் கார்கள் உள்பட அனைத்து வாகனங்களும் வழிவிட்டு தாங்கள் செல்வதற்காக வரிசையில் காத்திருந்தன. அப்போது, ஹரியானா மாநிலத்தின் பதிவெண் கொண்ட கார் ஓட்டுநர் மட்டும் மற்ற வாகனங்கள் வரிசையில் நிற்பது தெரியாதது போல, பேருந்து வந்த திசைக்கு எதிர்திசையில் தனது காரை வேகமாக ஓட்டிச்சென்றார். ஆனால், சரியாக பேருந்தின் முன்பு அவர் மற்ற கார்களுக்கு இடையே புகுந்து செல்ல வழியே இல்லை.
இதெல்லாம் தேவையா?
இதனால், பேருந்தும் எதிர்திசையில் வர இயலாமல் அந்த காரும் வழிவிட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், ஏற்கனவே காத்திருந்த வாகன ஓட்டிகள் மேலும் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பின்னர், வேறு வழியே இல்லாததால் அந்த காரை மீண்டும் தான் வந்த பாதையிலே பின்னோக்கி அதன் ஓட்டுநர் ஓட்டி வந்தார்.
இதை அங்கிருந்த சக வாகன ஓட்டி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதன் கீழே பலரும் அந்த கார் ஓட்டுனரை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் இதற்கு பெயர்தான் இன்ஸ்டன்ட் கர்மா என்றும் பதிவிட்டுள்ளனர். போக்குவரத்து விதிகளை மதிக்காமல் சென்ற அந்த கார் ஓட்டுனர் மீது அபராதம் விதிக்குமாறு போலீசாருக்கும் சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
காரின் பதிவெண் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட போலீசார் அந்த கார் உரிமையாளருக்கு அபராதம் விதித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: INDIA For Democracy: நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுகவின் அடுத்த ஸ்கெட்ச்.. ஜனநாயகத்திற்கான I.N.D.I.A கருத்தரங்கு
மேலும் படிக்க: Gyanvapi Masjid: ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அனுமதி - உயர்நீதிமன்றம் அதிரடி..