என்னிடம் காசு இல்லைப்பா... எருமையில் அமர்ந்து வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்!
”நான் கால்நடைகளை மேய்ப்பவன். என்னால் பெட்ரோல், டீசலுக்கு செலவு செய்ய முடியாது” என வேட்பாளர் ஆசாத் ஆலம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி வருவதை கண்டித்து பீகாரில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் எருமை மாட்டின் மீது அமர்ந்து மனுத்தாக்கல் செய்ய வந்தார்.
பீகார் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் 11 கட்டமாக நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில் இறுதி கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. பீகாரில் வெள்ளம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள 28 மாவட்டங்களில் 2 ஆம் கட்டமாக செப்டம்பர் 29 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு 2 நாட்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் உள்ள ராம்பூர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் ஆசாத் ஆலம் என்ற வேட்பாளர், தனது ஆதரவாளர்கள் மற்றும் கிராம மக்களுடன் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தார். மற்ற வேட்பாளர்களை காட்டிலும், இவர் வாக்குப்பதிவு செய்ய வந்த செய்தி தான் பீகார் முழுவதும் பேச்சாக உள்ளது. காரணம் அவர் வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த விதம் அப்படி. ஆம் தலையில், தலைப்பாகை கட்டிக்கொண்டு கையில் பெரிய குச்சியுடன் அலங்காரம் செய்யப்பட்ட எருமை மாட்டின் மீது அமர்ந்து கிராம மக்கள் புடை சூழ வேட்புமனுத் தாக்கல் செய்யும் இடத்துக்கு வந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து ஆசாத் ஆலம், ”நான் கால்நடைகளை மேய்ப்பவன். என்னால் பெட்ரோல், டீசலுக்கு செலவு செய்ய முடியாது” என கூறியுள்ளார். கத்திஹாரில் தற்போது பெட்ரோல் விலை 105 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு டீசல் விலையும் 96 ரூபாய்க்கு அதிகமாக இருப்பதால் மக்கள் மத்திய அரசு மீதும், பீகாரில் ஆட்சி செய்து வரும் அதன் கூட்டணியான நிதீஷ் குமார் அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். இதனை சரியாக பயன்படுத்தி இருக்கிறார் ஆசாத் ஆலம்.
பீகாரில் “பஞ்சாயத்து தலைவர், முக்கியா, வார்டு உறுப்பினர், பஞ்சாயத்து உறுப்பினர், மாவட்ட கவுன்சில் உறுப்பினர்” என 2.59 லட்சம் பதவிகளுக்கு போட்டியிட சுமார் 10 லட்சம் பேர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பீகாரில் 6 கோடியே 38 லட்சம் வாக்காளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றனர். அவர்களில், 3.35 கோடி பேர் ஆண்கள். 3.03 கோடி பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர்கள் 2,471 பேர் பீகார் உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப் பதிவு செய்ய உள்ளதாகவும், 1.13 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.