வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
"இ-டிக்கெட் vs கவுண்டர் டிக்கெட்: வெயிட்டிங் லிஸ்டில் எந்த டிக்கெட்டுக்கு ரயிலில் அனுமதி உண்டு? என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்."

Travelling on Waiting Ticket: இந்திய ரயில்வேயின் விதிகளின்படி, உறுதிப்படுத்தப்படாத வெயிட்டிங் லிஸ்ட் (Waiting List) டிக்கெட்டைக் கொண்டு ரயிலின் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் (Sleeper அல்லது AC வகுப்புகள்) பயணம் செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் பதிவு செய்யும் டிக்கெட்டின் தன்மை மற்றும் அது பெறப்பட்ட முறை ஆகியவற்றைப் பொறுத்து இதற்கான கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் மாறுபடுகின்றன.
ஆன்லைன் மற்றும் நேரில் பெற்ற டிக்கெட்டுகளுக்கான வேறுபாடுகள்
ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் அல்லது செயலி மூலமாக எடுக்கப்படும் இ-டிக்கெட்டுகள் (e-tickets) சார்ட் தயாரித்த பிறகும் வெயிட்டிங் லிஸ்டிலேயே இருந்தால், அவை தானாகவே ரத்தாகிவிடும். டிக்கெட் தொகைக்கான பணம் பயணி கணக்கிற்கே திரும்பச் செலுத்தப்படும் என்பதால், அந்த இ-டிக்கெட்டைக் கொண்டு ரயிலில் பயணிக்க முடியாது. அதேவேளையில், ரயில்வே கவுண்டரில் நேரில் பெறப்பட்ட காகித வடிவ வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் தானாக ரத்தாகாது. இந்த டிக்கெட்டை வைத்திருப்பவர்கள் ரயிலின் முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகளில் (General Unreserved Coaches) மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
பகுதி உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள் மற்றும் அபராத விவரங்கள்
ஒரே பிஎன்ஆர் (PNR) எண்ணில் பல பயணிகள் பதிவு செய்து, அதில் சிலருக்கு டிக்கெட் உறுதியாகி சிலருக்கு வெயிட்டிங் லிஸ்டில் இருந்தால், வெயிட்டிங் லிஸ்டில் உள்ள பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கக் கூடாது. டிக்கெட் பரிசோதகர் (TTE) சோதனையின் போது முன்பதிவு பெட்டிகளில் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுடன் பயணிப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் டிக்கெட் இல்லாமல் பயணிப்பவராகவே கருதப்படுவர். அவ்வாறு விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு வகுப்பிற்குத் தகுந்தவாறு அபராதம் விதிக்கப்படுவதோடு, அடுத்த ரயில் நிலையத்தில் அவர்களைப் பொதுப் பெட்டிக்கு மாற்றவோ அல்லது இறக்கிவிடவோ ரயில்வே அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் உண்டு.
ட்ரெண்டிங் செய்திகள்





















