Supreme Court Women CJI : உச்சநீதிமன்றத்தின் பெண் தலைமை நீதிபதி : இவர்களில் ஒருவர்தானா?
நீதிபதி நாகரத்னா நியமனம் செய்யப்பட்டால், 2027-ஆம் ஆண்டில் இந்தியா உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தில் புதிதாக ஒன்பது நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பட்டியலில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நாகரத்னா,தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹீமா கோலி, குஜராத் உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த பெலா திரிவேதி ஆகிய மூன்று பெண் நீதிபதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
நீதிபதி நாகரத்னா நியமனம் செய்யப்பட்டால், 2027-ல் இந்தியா உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. கர்நாடக உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அபய் ஓகா, குஜராத் உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் ஜே.கே மகேஸ்வரி ஆகியோரின் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
நீதிபதி மகேஸ்வரி: தனது தலைமையிலான அரசை கவிழ்க்க உச்ச நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதி தலையிடுவதாக ஆந்திர முதல்வர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டிய சில நாட்களுக்குப் பிறகு, ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி மகேஸ்வரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிக்கிம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார்.
நீதிபதி அபய் ஓகா: இந்தியாவின் உயர்நீதிமன்றங்களில் மிக மூத்த நீதிபதியான நீதிபதி அபய் ஓகா, நாட்டின் பொதுச் சுதந்திரத்தை பேணிக் காக்கும் வகையில் பல தீர்ப்புகளை வழங்கியவர். கொரோனா பெருந்தொற்று காலங்களில் புலம்பெயர் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் பல உத்தரவுகளை பிறப்பித்தார். நோய்த் தொற்றுப் பரவலைக் கையாள்வதற்கு அரசு தவறவிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கேள்வி எழுப்பியவர்.
நீதிபதி விக்ரம் நாத்:
கொரோனா இரண்டாவது அலையில் குஜாராத் மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதபதி விக்ரம் நாத் தலைமயிலான அமர்வு, இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரித்துது. இந்த வழக்கு விசாரணையின், தொற்றின் பரவல் கட்டுக்குள் இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்ட வாதங்களை ஏற்க மறுத்தார். போதுமான மருத்துவ கட்டமைப்பு வசதி இல்லாதது, சுகாதார காப்பீடு திட்டம் அதிக மக்களை சென்றடையாதது, ஆக்சிஜன் தட்டுப்பாடு, ரெம்டெசிவிர் , கொரோனா மருத்துவ பரிசோதனை தொர்பாக பல உத்தரவுகளை பிறப்பித்தார். உண்மையான களநிலைவரத்தை குஜராத் அரசு புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் இப்போது கடவுளின் தயவில் இருப்பதாக நினைக்கிறார்கள் என்று தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
கேரள உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான சி டி ரவிக்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது மூத்த நீதிபதி எம்.எம் சுந்தரேஷ் ஆகியோரது பெயர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
கள்ளக்குறிச்சி தொகுதியின் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு, சௌந்தர்யா திருமணம் தொடர்பான வழக்கை விசாரித்தவர் எம்.எம் சுந்தரேஷ். இந்த வழக்கில், சௌந்தர்யா அவரது கணவருடன் செல்லலாம் என நீதிபதி தீர்ப்பளித்தவர்.
கொலீஜியம் முறை:
நீதிபதிகள் தேர்வுக் குழு (Collegeium-கொலீஜியம்) என்பது இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன், உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவாகும். இத்தேர்வுக்குழுவின் பணி, உச்சநீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும்.
நீதிபதிகள் தேர்வுக் குழு பரிந்துரைக்கும் நபரை நீதிபதியாக நியமிக்கும்படி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி குடியரசுத் தலைவருக்கு (அரசுக்கு) தெரிவிப்பார். உச்சநீதிமன்ற தேர்வுக்குழு பரிந்துரைக்கும் யாரையாவது அரசு ஏற்கவில்லை எனில், அதற்குப் போதிய காரணங்களைத் தெரிவித்தாக வேண்டும். இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம்தான் உள்ளது என "நீதிபதிகள் தேர்வுக் குழு” எடுத்துரைக்கிறது.
மேலும், வாசிக்க:
Petrol Price : 'பெட்ரோல் விலை' மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது உண்மையா..?