Petrol Price : 'பெட்ரோல் விலை' மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது உண்மையா..?
ஆயில் பாண்ட்ஸ் என்றால் என்ன, எதற்காக கொண்டுவரப்பட்டது? இந்த சிக்கலுக்கு ஆயில் பாண்ட்ஸ்தான் காரணமா?
தமிழ்நாடு அரசு பெட்ரோல் மீதான உற்பத்தி விலையை ரூ.3 அளவுக்கு சில நாட்களுக்கு முன்பு குறைத்தது. இந்த விலை குறைப்பு தேசிய விவாதமாக மாறியது. மத்திய அரசும் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என எதிர்பார்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரஸ் அரசு வெளியிட்ட எண்ணெய் பத்திரங்கள் (Oil Bonds) தற்போதைய அரசு வட்டி மற்றும் அசலை செலுத்தி வருகிறது. வரும் 2025-26-ம் நிதி ஆண்டு வரை இந்த தொகையை செலுத்த வேண்டி இருக்கும். அதனால் பெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரியை குறைப்பது சாத்தியம் அல்ல என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தொலைகாட்சி விவாதங்களில் பா.ஜ.க சார்பாக பேசுபவர்கள் கூட ஆயில் பாண்ட்ஸ்தான் இந்த அனைத்து சிக்கலுக்கு காரணம், இல்லையெனில் அரசு விலை குறைப்பு செய்திருக்கும் என பேசுவார்கள். ஆயில் பாண்ட்ஸ் என்றால் என்ன, எதற்காக கொண்டுவரப்பட்டது? இந்த சிக்கலுக்கு ஆயில் பாண்ட்ஸ்தான் காரணமா? ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
ஆயில் பாண்ட்ஸ்
இந்தியாவில் 2010-ம் ஆண்டு வரை அரசு நிர்ணயம் செய்துதான் பெட்ரோல் டீசல் விலை. 2010-ம் ஆண்டுக்குதான் சந்தை விலைக்கு பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 2005-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் (ஹெச்.பிசிஎல், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில்) நஷ்டம் அடைந்தன. இந்த நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரொக்கமாக கொடுக்காமல் பத்திரங்களாக கொடுத்தது. குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து பணம் கிடைத்துவரும் என்பது நிறுவனங்களுக்கும் பிரச்சினையில்லை, அரசுக்கும் நெருக்கடி இல்லை என்பதால் இந்த பத்திரங்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
எண்ணெய் பத்திரங்கள் மூலமாக ரூ.1.4 லட்சம் கோடி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. 2014-ம் ஆண்டு பா.ஜ.க அரசு பொறுப்பேற்கும் போது ரூ.1.34 லட்சம் கோடி நிலுவையில் இருந்தது. எண்ணெய் பத்திரங்களுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக 70,195 கோடி ரூபாய் வட்டி மட்டுமே செலுத்தப்பட்டிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் அசலில் ரூ,3,500 கோடி மட்டுமே செலுத்தப்பட்டிருக்கிறது. மீதமுள்ள ரூ.1.3 லட்சம் கோடியை 2025-26-ம் நிதி ஆண்டு வரை செலுத்த வேண்டி இருக்கிறது. இந்த சுமை மட்டும் இல்லை என்றால் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்திருக்க முடியும் என நிதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
உற்பத்தி வரி வசூல் எவ்வளவு?
- 2018-2019-ம் நிதி ஆண்டின் உற்பத்தி வரி வசூல் ரூ. 2.13 லட்சம் கோடி.
- 2019-2020-ம் நிதி ஆண்டி உற்பத்தி வரி வசூல் ரூ1.78 லட்சம் கோடி
- கடந்த நிதி ஆண்டில் (2020-21 உற்பத்தி வரி வசூல் ரூ.3.35 லட்சம் கோடி.
பெட்ரோல் டீசல் அல்லாத இதர பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தி வரியை சேர்த்தால் கடந்த நிதி ஆண்டில் மொத்த உற்பத்தி வரி ரூ. 3.89 லட்சம் கோடி.
- நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு (1.01 லட்சம் கோடி ரூபாய்) மேல் பெட்ரோலிய பொருட்கள் மீதான உற்பத்தி வரி வசூல் செய்யப்பட்டிருக்கிறது.
- கடந்த மூன்று நிதி ஆண்டுகள் மற்றும் மூன்று மாதத்தில் சுமார் 8.8 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பெட்ரோலிய பொருட்கள் மீதான உற்பத்தி வரி வசூலிக்கப்பட்டிருக்கிறது.
செலுத்த வேண்டிய தொகை?
- நடப்பு நிதி ஆண்டில் ரூ.10000 கோடி
- 2023-24-ம் நிதி ஆண்டில் ரூ31,150 கோடி
- 2024-25-ம் நிதி ஆண்டில் ரூ. 52,860 கோடி
- 2025-26-ம் நிதி ஆண்டில் ரூ.36,913 கோடி
- மொத்தம் : ரூ.1,30,923 கோடி
இதுதவிர 37,000 கோடி ரூபாய் அளவுக்கு வட்டி செலுத்த வேண்டும்.
செலுத்த வேண்டிய தொகை இவ்வளவுதான். ஆனால் இதைவிட பல மடங்கு அளவுக்கு உற்பத்தி வரி மூலம் மத்திய அரசு வரியை வசூலித்துவிட்டது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. பெட்ரோலிய பொருட்களின் மீது கிடைக்கும் வரி வருமானத்தில் 3.2 சதவீதம் மட்டுமே ஆயில் பாண்ட்களுக்கு செலவு செய்யப்படுகிறது என்றும் காங்கிரஸ் விமர்சனம் செய்திருக்கிறது. தற்போதைய நிதி ஆண்டில் ரூ20,000 கோடி மட்டுமே செலுத்த வேண்டும். ஆனால் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி வருமானம் ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என காங்கிரஸ் தெரிவித்திருக்கிறது.
உற்பத்தி வரி எவ்வளவு?
2014-ம் ஆண்டு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 9.48 ரூபாய் மட்டுமே உற்பத்தி வரி இருந்தது. ஆனால் தற்போது 32.90 ரூபாயாக உற்பத்தி வரி இருக்கிறது. டீசலுக்கு ரூ.3.56-ல் இருந்து தற்போது 31.80 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு கோவிட் முதல் அலையில் பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை கடுமையாக சரிந்தது. அப்போது கச்சா எண்ணெய் விலை நெகட்டிவாக சென்றது. அந்த சமயத்தில் ( மே 2020) பெட்ரோலில் லிட்டருக்கு 10 ரூபாயும், டீசலில் லிட்டருக்கு ரூ.13 –ம் உயர்த்தப்பட்டது.
உற்பத்தி வரி மூலம் கிடைக்கும் அனைத்து தொகையும் கடனை செலுத்துவதற்கே பயன்படுத்த முடியாது. இதர வளர்ச்சி திட்டங்களுக்கும் பயன்படுத்த வேண்டும் என்பதை புரிந்துகொள்ள முடியும். ஆனால் அத்தனை குற்றப்பட்டியலையும் காங்கிரஸ் மீதும் ஆயில் பாண்ட்கள் மீதும் வைப்பதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்..!