பட்ஜெட் 2022: சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு என்ன?
72 சதவிகிதம் பேர் அரசாங்கம் பெட்ரோல் விலையை குறைக்கும் என்று நம்புகிறார்கள் என காந்தார் என்னும் ஆய்வு நிறுவனம் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.
இந்திய மெட்ரோ நகரங்களில் நடத்தப்பட்ட ஒரு சர்வேயின்படி, வரவிருக்கும் பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கான ஒதுக்கீட்டை அரசு விரிவுபடுத்தும் என்றும் அவர்களின் ஒட்டுமொத்த மருத்துவச் செலவுகளைக் குறைக்க சிறந்த கொள்கைகளை அரசு அறிமுகப்படுத்தும் என்று இந்திய நுகர்வோர் எதிர்பார்க்கின்றனர்.
கொரோனா பெருந்தொற்று அதன் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில் நாட்டின் 66 சதவிகித மக்கள் சுகாதார பட்ஜெட் ஒதுக்கீடுகளில் அதிகரிப்பை எதிர்பார்க்கிறார்கள். மேலும் 72 சதவிகிதம் பேர் அரசாங்கம் பெட்ரோல் விலையை குறைக்கும் என்று நம்புகிறார்கள் என காந்தார் என்னும் ஆய்வு நிறுவனம் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.
மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, புனே, ஹைதராபாத், பெங்களூர், அகமதாபாத், இந்தூர், பாட்னா, ஜெய்ப்பூர் மற்றும் லக்னோ ஆகிய 12 இந்திய நகரங்களில் 21-55 வயதுடைய 1419 நுகர்வோர்களை காந்தார் நிறுவனம் ஆய்வு செய்தது. முன்னதாக, யூனியன் பட்ஜெட் 2022 குறித்த நுகர்வோர் உணர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை காந்தாரின் இந்த சர்வே ஆய்வு செய்தது. இந்த நுகர்வோர் பட்டியலில் சம்பளதாரர்கள், வணிகர்கள், வெகுஜன மக்கள் மற்றும் பணம் படைத்தவர்கள் என பல்வேறு தரப்பட்டவர்களும் இருந்தனர்.
ஆய்வு முடிவுகளின்படி, பெருந்தொற்று காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவச் செலவுகள் அதிகரித்து வருவதால், மக்களின் சுகாதாரப் பாதுகாப்புக்கு அதிக தொகை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்கிற குரல் அதிகரித்துள்ளது. மொத்தம் 57 சதவிகித மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.இந்த ஆய்வு இந்திய பட்ஜெட் தொடர்பான காந்தாரின் முதல் ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர எரிபொருள் சார்ந்த பணவீக்கம் குறித்தும் சர்வேயில் கணக்கிடப்பட்டுள்ளது.
“கணக்கெடுக்கப்பட்டவர்களில் 72 சதவிகிதம் பேர் இந்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டியின் வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், இது எரிபொருள் செலவைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பு நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் 65 சதவிகிதமும் பெருநகரங்களில் 74 சதவிகிதமுமாக உள்ளது” என சர்வே கூறுகிறது.
”வரிவிலக்குகளைப் பொருத்தவரை தொற்றுநோயின் மூன்றாம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்கும் போது, பொது சுகாதாரக்கட்டமைப்பு மற்றும் மருத்துவ செலவினங்களின் சுமையை குறைக்க உதவும் காப்பீட்டுக்கான வரி விலக்குகள் போன்றவற்றில் அரசு அதிகமாக முதலீடு செய்ய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது” என்று காந்தார் நிர்வாக இயக்குனர் தீபேந்தர் ராணா கூறுகிறார்.
இதுதவிர ஃப்யூல் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியத்தை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் ராணா கூறுகிறார்.