சாகசம் செய்து அசத்திய பாதுகாப்பு படை நாட்டு வகை நாய்கள்.. கைத்தட்டி ரசித்த பிரதமர் மோடி...வைரல் வீடியோ
அணிவகுப்பில் வைக்கப்பட்டிருந்த உயரமான ஏணிகளில் நாட்டு நாய்கள் ஏறி சாகசம் மேற்கொண்டது பார்ப்பவர்களை வியக்க வைத்தது.
சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான இன்று தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு குஜராத் கேவாடியாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் பிரம்மாண்ட ஒற்றுமை சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
பின்னர், ராணுவ வீரர்களின் அணிவகுப்பை பிரதமர் மோடி ஏற்று கொண்டார். இதை தொடர்ந்து, அணிவகுப்பில் நாட்டு இன நாய்கள் பல்வேறு சாகசங்களை மேற்கொண்டன. அங்கு வைக்கப்பட்டிருந்த உயரமான ஏணிகளில் நாய்கள் ஏறி சாகசம் மேற்கொண்டது பார்ப்பவர்களை வியக்க வைத்தது. அதுமட்டுமின்றி, அங்கு அமைக்கப்பட்ட கூடாரங்களை தாண்டி சென்று அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் டெல்லியில் உள்ள படேல் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார். நாட்டை பிளவுபடுத்த சில சக்திகள் முயற்சித்த போதிலும், சர்தார் வல்லபாய் படேல் தனது தொலைநோக்கு பார்வையால் வலிமையான மற்றும் ஒன்றுபட்ட இந்தியா என்ற கனவை நனவாக்கினார் என அவர் தெரிவித்திருந்தார்.
View this post on Instagram
அடுத்த 25 ஆண்டுகளில், இந்தியாவை வலிமையான மற்றும் வளமான நாடாக மாற்ற வேண்டும் என்ற நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவை இந்தியா நனவாக்கி அதன் 100ஆவது சுதந்திரத்தை கொண்டாட வேண்சடும் என்றும் அமித் ஷா கூறினார். வல்லபாய் படேலின் 147வது பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் தேசிய தலைநகரில் மாரத்தானை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் தொடங்கிய ஒற்றுமைக்கான ஓட்டத்தில், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் மத்திய காவல் படை வீரர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். தேசிய ஒற்றுமை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படுகிறது. இது, 2014ஆம் ஆண்டு, மோடி அரசால் தொடங்கப்பட்டது.