எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை.. போக்சோ வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு!
எடியூரப்பாவை போக்சோ வழக்கில் கைது செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
BS Yediyurappa: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி. எஸ். எடியூரப்பாவை கைது செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அடுத்த விசாரணைை நடைபெறும் வரை அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவோ, கைது செய்யவோ கூடாது, என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு: பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டத்தின் (போக்சோ) கீழ் எடியூரப்பாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் நேற்று பிறப்பிக்கப்பட்டது. இந்த புகாரில் துளி அளவு கூட உண்மை இல்லை என எடியூரப்பாவின் மகன் பி. ஒய். ராகவேந்திரா விளக்கம் அளித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த கர்நாடக பாஜக, "மக்களவை தேர்தலில் ஏற்பட்ட அவமானகரமான தோல்வியால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தலைவர்கள், பாஜவுக்கு எதிராக ஒன்றன் பின் ஒன்றாக சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
பாஜக மீது வெறுப்படைந்த காங்கிரஸ், மனநலம் குன்றிய பெண்ணின் புகாரின் அடிப்படையில் நமது மதிப்பிற்குரிய தலைவர் பி.எஸ். எடியூரப்பாவை கைது செய்ய முயற்சித்து வருகிறது. கர்நாடகாவில் பாஜகவுக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பியதற்காக ராகுல் காந்தி நீதிமன்றத்தை எதிர்கொண்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என விமர்சித்துள்ளது.
வழக்கின் பின்னணி என்ன? காவல்துறை தரப்பு வெளியிட்ட தகவலின்படி, கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி, 17 வயது சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் எடியூரப்பா மீது போக்சோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) ஆகியவற்றின் கீழ் புகார் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கூறுகையில், "இந்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி டாலர்ஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் ஒரு சந்திப்பின் போது எனது மகளை அவர் பாலியல் வன்கொடுமை செய்தார்" என்றார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த எடியூரப்பாவின் வழக்கறிஞர், "நான் இதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். அவர் (அம்மா) வழக்குகள் தொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். விவரம் கொடுத்துள்ளேன். பிளாக்மெயில் செய்வது அவரது வழக்கம்" என்றார்.
எடியூரப்பா மீது புகார் அளித்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் நுரையீரல் புற்றுநோயால் கடந்த மாதம் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். தன் மீது சுமத்தப்பட்டு குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த எடியூரப்பா, "மோசடி வழக்குகளில் உதவி கேட்டு அந்த சிறுமி என்னிடம் வந்தார். இருப்பினும், அவர் என்னிடம் சரியாகப் பேசாததால், அவர் மனநிலை சரியில்லாமல் இருக்கலாம் என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது" என்றார்.