"உங்களுக்கு கடவுள் தந்த தண்டனை" வினேஷ் போகத்தின் ஒலிம்பிக் தோல்வி குறித்து பிரிஜ் பூஷன் பரபர!
காங்கிரஸ் கட்சியில் இணைந்த வினேஷ் போகத் மீது பாஜக முன்னாள் எம்பி பிரிஜ் பூஷன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
மல்யுத்த வீரர் வினேஷ் போகத் குறித்து முன்னாள் பாஜக எம்பியும் முன்னாள் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் வினேஷ் போகத் இணைந்திருப்பதும் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு தந்திருப்பதும் பாஜகவுக்கு எதிராக நடந்த சதிக்கு சான்று என பிரிஜ் பூஷன் தெரிவித்துள்ளார்.
"மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் சதி"
இதுகுறித்து செய்தியாளர்களிடம் விரிவாக பேசிய அவர், "கடந்த 2023ஆம் ஆண்டு, ஜனவரி 18ஆம் தேதி, மல்யுத்த வீரர்களின் போராட்டங்கள் தொடங்கியபோது, இது மல்யுத்த வீரர்களின் போராட்டம் அல்ல என்றும், அதன் பின்னணியில் காங்கிரஸ் உள்ளது என்றும் முதல் நாளிலேயே கூறியிருந்தேன்.
குறிப்பாக (காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் ஹரியானா முதலமைச்சர்) பூபிந்தர் ஹூடா, (அவரது மகன் மற்றும் எம்பி) தீபேந்தர் ஹூடா மற்றும் பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இருக்கின்றனர் என கூறினேன். இப்போது, அது உண்மையாகி விட்டது.
எனக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் சதி இருக்கிறது. அதில், காங்கிரஸின் தலையீடு இருந்தது. அதற்கு பூபிந்தர் ஹூடா தலைமை தாங்கினார். பெண்களின் மரியாதைக்காக பூபிந்தர் ஹூடா, தீபேந்தர் ஹூடா, வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் போராட்டம் நடத்தவில்லை என்பதை ஹரியானா மக்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
வினேஷ் போகத் பரபர குற்றச்சாட்டு:
இதற்கு காங்கிரஸ் தலைவர்களும் போராட்டக்காரர்களும்தான் காரணம். அரசியல் காரணங்களுக்காக அவர்கள் மகள்களைப் பயன்படுத்தி, பெண் மல்யுத்த வீரர்களின் மரியாதையை காயப்படுத்தினர். இதற்கான திரைக்கதை காங்கிரஸால் எழுதப்பட்டது.
வினேஷ் போகத், ஒரே நாளில் இரண்டு எடை பிரிவுகளுக்கான சோதனை சுற்றில் கலந்து கொண்டார். ஐந்து மணி நேரம் சோதனைகளை நிறுத்தி வைத்தார். 53 கிலோ பிரிவில் 10-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த அவர், 50 கிலோ பிரிவில் போராடினார்.
ஷிவானி பவார் 5-1 என்ற கணக்கில் வென்றார். ஆனால், ஒரு சலசலப்பை உருவாக்கி, நடுவர்கள் நேர்மையற்ற முறையில் ஈடுபட்டு, போகத்தை வெற்றியாளராக அறிவித்தனர். அதற்கான முடிவை, ஒலிம்பிக் முடிவு மூலம் கடவுள் கொடுத்துவிட்டார்" என்றார்.