நிதிஷ் குமாரை பின்னுக்கு தள்ளிய பாஜக.. தொகுதி பங்கீடு ஓவர்.. பீகாரில் மிஷன் ரெடி!
பீகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி நேற்று முன்தினம் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் தொடங்க உள்ளது. 7 கட்டங்களாக நடத்தப்படும் வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
எதிர்பார்ப்பை எகிற வைத்த நாடாளுமன்ற தேர்தல்:
மக்களவை தேர்தலை தவிர, ஆந்திர பிரதேசம், ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தலில் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பல்வேறு மாநிலங்களில் கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இந்த நிலையில், பீகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலம் என்பதால் பீகாருக்கு பாஜக அதிக முக்கியத்துவம் அளித்து வந்தது.
பீகாருக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாஜக:
இதனால், பீகாரில் கூட்டணியை பலப்படுத்தும் வகையில் இந்தியா கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியை தங்கள் கூட்டணியில் இணைக்க பாஜக முயற்சி மேற்கொண்டது. இதையடுத்து, லாலு பிரசாத் யாதவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வந்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது.
இதனை தொடர்ந்து, மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அதுமட்டும் இன்றி, முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் கட்சியை கூட்டணியில் கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்தது.
இப்படிப்பட்ட சூழலில், பீகாரில் பாஜக கூட்டணியின் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் 17 தொகுதிகளில் பாஜகவும் 16 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளமும் போட்டியிடுகிறது. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிகார் முன்னாள் முதலமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் ஆர்.எல்.ஏ.எம். கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை, பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் சமமான தொகுதிகளில் போட்டியிட்டு வந்தது.
ஆனால், இந்தமுறை, முதல்முறையாக நிதிஷ் குமார் கட்சியை விட கூடுதலாக ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது பாஜக. கடந்த தேர்தலில், பாஜக, ஐக்கிய ஜனதா தளம் தலா 17 தொகுதிகளில் போட்டியிட்டது. லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.