Rahul Gandhi: ”ராமர் அலை” என எதுவும் இல்லை.. அது அரசியல் நிகழ்வு.. ராகுல் காந்தி பேச்சுக்கு பாஜக கண்டனம்
Rahul Gandhi: இந்தியாவில் ”ராமர் அலை” என எதுவும் இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு, பாஜக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது.
Rahul Gandhi: இந்தியாவில் ”ராமர் அலை” என எதுவும் இல்லை, அது பாஜகவின் நிகழ்ச்சி என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையாகியுள்ளது.
”ராமர் அலை இல்லை”
ராகுல் காந்தியின் நியாய யாத்திரை அசாமில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவால் ஏற்பட்டுள்ள அலையை எப்படி எதிர்கொள்வது என திட்டங்கள் ஏதேனும் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தபோது, ”இங்கு அலை இருக்கிறது என்பது போன்று எதுவுமில்லை. பாஜகவின் அரசியல் திட்டமும், நரேந்திர மோடியின் நிகழ்ச்சியும் அங்கு அரங்கேறியுள்ளது. அது நன்றாக இருக்கிறது. ஆனால் நான் ஏற்கனவே சொன்னதை போன்று, நாட்டைப் பலப்படுத்துவது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் நீதி வழங்குதல், அனைவருக்குமான வாய்ப்பு, பெண்களுக்கான நீதி, விவசாயிகளுக்கு நீதி, மற்றும் தொழிலாளர்களுக்கு நீதி மட்டுமே என்பதில் எங்களுக்கு ஒரு தெளிவு உள்ளது. பாத யாத்திரையின்போது திட்டமிடப்பட்டு இருந்த பல நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதன் மூலம் அசாம் முதலமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மறைமுகமாக எங்களுக்கு உதவுகிறார்கள். அவர்கள் என்ன தடைகளை உருவாக்கினாலும், எங்களது பயணம் மக்களைச் சென்றடைகிறது” என ராகுல் காந்தி தெரிவித்தார்.
பாஜக கண்டனம்:
அயோத்தி கோயில் குடமுழுக்கு கோலாகலமாக கொண்டாடபட்ட நிலையில், ராமர் அலை என எதுவும் இல்லை என்ற தொனியிலான பேச்சை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. இதுதொடர்பாக பேசியுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, “ஸ்ரீராமர் இல்லை என்று மறுத்து வரும் அரசியல் கட்சி, தற்போது ஸ்ரீராமர் அலை இல்லை, கற்பனை என்று கூறியதில் ஆச்சரியமில்லை. ராமர் கோயில் குடமுழுக்கு விழா மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கும் இந்தியர்களின் உணர்வுகளையும் மடைமாற்ற முயற்சிக்கின்றனர். ராமர் அலை இல்லை, மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்ட சூழல் இல்லை, ராம பக்தர்களின் உணர்வுகள் இல்லை என்று பேசுகின்றனர். ராமர் கோவில் வழக்கை பல ஆண்டுகளாக நடத்தி, அலைந்து திரிந்து பல ஆண்டுகளாக கூடாரத்தில் வைக்கப்பட்டு இருந்த குழந்தை ராமர் தற்போது, பிரமாண்டமாக கோயிலுக்குள் நிறுவப்பட்டுள்ளார். அதேநேரத்தில் சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்பவர்களுடன் கூட்டணியை வைத்திருக்கும், கட்சியின் தலைவர் இன்று தெருக்களில் பயணம் திரிந்து வருகிறார்” என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்றைய நடைபயணத்தின் போது தனியார் கல்லூரியில் திட்டமிடப்பட்டு இருந்த, உரை நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை விதித்தது. இதனால், காங்கிரஸ் தொண்டர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை குறிப்பிட்டு, மக்களை போராட தூண்டியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது, அசாம் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது