Khushbhu Complaint : ’நல்ல சூழ்நிலையில் வளர்ந்த ஆண்கள் யாரும்..’ தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தபின் பேசிய குஷ்பு
திமுக நிர்வாகி சைதை சாதிக் தன்னை அவதூறாக பேசியதாக கூறி பாஜகவை சேர்ந்த குஷ்பூ டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
திமுக நிர்வாகி சைதை சாதிக் தன்னை அவதூறாக பேசியதாக கூறி பாஜகவை சேர்ந்த குஷ்பூ டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,” நிச்சயமாக நல்ல சூழ்நிலையில் வளர்ந்த ஆண்கள் யாரும் பெண்களை இவ்வாறு தவறாக பேச மாட்டார்கள். பெண்களை பற்றி தவறாக பேசும்போது யாரும் இப்படி ரசிக்க மாட்டார்கள். என்னை தவறாக பேசியது குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மாவிடம் புகார் அளித்துள்ளேன். புகாரை பெற்ற அவர்கள் இதுகுறித்து நிச்சயம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்” என்று பேட்டியளித்தார்.
Chairperson @sharmarekha has written to DGP @tnpoliceoffl to file an FIR against political leader Saidai Sadiq for derogatory comments on women leaders. The Commission has also sought a time-bound investigation in the matter.
— NCW (@NCWIndia) November 1, 2022
தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “என்னை டேக் செய்து, குஷ்பு பதிவிட்ட ட்வீட்டை அடிப்படையாகக் கொண்டு, தேசிய மகளிர் ஆணையம் சார்பில் ஏற்கெனவே சுமோட்டோ வழக்கு பதிவு செய்துவிட்டோம். அமைச்சர் மனோ தங்கராஜ் பொதுமக்களுக்கு முன்னால் குஷ்புவுக்கு எதிராகப் பாலியல் கருத்தைத் தெரிவித்துள்ளார். தேசிய மகளிர் ஆணையம் எப்போதும் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக நின்றுள்ளது. எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இத்தகைய அரசியல்வாதிகள் மீது, ஆணையம் வழக்குப் பதிவு செய்து வருகிறது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சைதை சாதிக் மீது மாநில அரசு எஃப்ஐஆர் பதிவு செய்திருந்தாலும், நடவடிக்கை எடுக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. வழக்குப் பதிவுக்குப் பிறகு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சைதை சாதிக்குக்கு சம்மன் அனுப்பி, நாங்கள் விசாரிக்க உள்ளோம்” என்று தெரிவித்தார்.