BJP Election Plan: காசி - ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி..! 10-க்கு இலக்கு, பாஜக போடும் கணக்கு..! அதிமுக நிலை என்ன?
பாஜக தலைமையிடம் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ்நாட்டில் 10 தொகுதிகளை குறிவைத்துள்ளதகாவும், அங்கு ஏற்கனவே தேர்தல் பணிகளைத் தொடங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக தலைமையிடம் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ்நாட்டில் 10 தொகுதிகளை குறிவைத்துள்ளதகாவும், அங்கு ஏற்கனவே தேர்தல் பணிகளைத் தொடங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தீவிரமடையும் தேர்தல் பணி:
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. வரும் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பல கட்டங்களாக இந்த நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்கனவே ஆயத்த பணிகளை தொடங்கிவிட்டது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணக்கெடுப்பது, சீர் செய்வது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம்:
தேர்தல் ஆணையம் மட்டுமல்ல, தற்போதே தேசிய கட்சிகளும், வலுவான மாநிலக் கட்சிகளும் கூட தேர்தல் ஆயத்த பணிகளைத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, தமிழகத்தில், அஇஅதிமுக- பாஜக இடையே கூட்டணி என பெரும் தலைவர்கள் முடிவு செய்தாலும், அடுத்தக் கட்டத் தலைவர்களால் கூட்டணி உடைந்துவிடுமோ என்ற அளவுக்கு தற்போது இருதரப்புக்கும் இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது.
கொளுத்திப்போட்ட அமித் ஷா & அண்ணாமலை:
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகைக்குப்பிறகு, இந்த வார்த்தைப் போர் சூடுபிடித்துள்ளது. 25 தொகுதிகளை வெற்றிப் பெற வேண்டும் என அமித் ஷா பேச, பாஜக 25 தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்ற தகவல் பரவியது. இதனால் அதிமுக கொந்தளிப்பில் உள்ளது. அதேபோல், ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டவர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூற, அதிமுக தலைவர்கள் பொங்கிவிட்டனர்.
வார்த்தைப் போர்:
பாஜகவிற்கு எத்தனை தொகுதிகளைத் தருவது என்பதைத் நாங்கள் தான் தீர்மானிப்போம் என கூறிய அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செம்மலை, ஜெயலலிதா குறித்து பேசுவது தவறு என்றும் கர்நாடகாவில் பாஜக-வின் 40 சதவீத கமிஷன் ஊழல் குறித்து முதலில் பேசுங்கள் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தச்சூழலில், தமிழகத்தில் பாஜக-வின் நிலைமை முன்பு போல் இல்லை தற்போது, வளர்ந்து வருகிறோம் என்பதால், உரியதை பெறுவோம் என்ற வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் பேட்டி அளிக்கிறார். அதிமுக-வின் ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுக்கிறார் பாஜக-வின் முன்னணி நிர்வாகி கரு நாகராஜன்.
பாஜக இலக்கு:
இதனிடையே, நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பாஜகவின் டெல்லி தலைமை தீவிர திட்டமிடலில் உள்ளது. குறிப்பாக, இந்த முறை, தென்னிந்தியாவில் குறைந்தபட்சம் 50 தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது. அதிலும், இதுவரை சாதிக்க முடியாத தமிழகத்தில், இந்தமுறை குறிப்பிடத்தக்க இடங்களை வென்றே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக உள்ளது. அதற்கேற்ப பிரதமரே இம்முறை தமிழகத்தின் ராமநாதபுரத்தில் இருந்து போட்டியிடுவார் என்ற அதிகாரப்பூர்வமற்ற தகவலையும் ஏற்கெனவே கசியவிட்டுள்ளது.
காசி டு ராமேஸ்வரம் மோடி:
காசியிலும் மோடி, ராமேஸ்வரத்திலும் ( ராமநாதபுரதம் நாடாளுமன்ற தொகுதியில்தான் ராமேஸ்வரம் வருகிறது) மோடி என்ற வகையில், தங்களது கோஷத்திற்கு வலுச்சேர்க்க திட்டமிட்டுள்ளது. கடந்தமுறை பாஜக சார்பில், நயினார் நாகேந்திரன் ராமநாதபுரத்தில் போட்டியிட்டு, குறிப்பிடத்தகுந்த வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார். இந்த முறை அங்கு மோடி போட்டியிட்டால், அத்தொகுதிக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைப்பதுடன், தமிழகத்தில் பாஜக, வலுவாக ஊன்ற கைகொடுக்கும் என அக்கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. எனவே, கிட்டத்தட்ட ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடுவது உறுதி என்றே தெரிகிறது. அதற்கான அடிப்படை ஆயத்தப்பணிகள், கருத்துக்கணிப்பு போன்றவை தமிழக பாஜக-விற்கே பெரிய அளவு தெரியாமல், நடைபெற்று வருவதாகத் கூறப்படுகிறது.
தமிழராகும் ”மோடி”
அண்மையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்தைச் சேர்ந்தவர் பிரதமராக வேண்டும் எனக் கூறியிருந்தார். மோடி தமிழராக இல்லாவிட்டாலும், தற்போது தமிழக பாஜகவினர், பிரதமர் மோடி, தமிழையும் தமிழர்களையும் நிறைய நேசிக்கிறார். செல்லுமிடமெல்லாம் தமிழைப் புகழ்கிறார். கிட்டத்தட்ட, தமிழராகவே மாறிவிட்ட பிரதமர் மோடி, ராமநாதபுரத்தில் இருந்து தேர்வு செய்யப்படுவது பொருத்தமாக இருக்கும் என்றும் கூற ஆரம்பித்துள்ளனர்.
10 தொகுதிகள் இலக்கு:
இந்தச்சூழலில், ராமநாதபுரம் மட்டுமல்ல, குறைந்தபட்சம் 10 தொகுதிகளை உறுதியாக அதிமுக-விடம் இருந்து கேட்டுப் பெறுவது என்பதில் பாஜக தீர்மானமாக உள்ளது. 15 தொகுதிகளில் ஆரம்பித்து, 10 தொகுதிகளுக்கு உடன்படிக்கை ஏற்படும் என பாஜக தலைமை நம்புகிறது. அதற்கேற்ப அந்த 10 தொகுதிகள் பட்டியலையும் முடிவு செய்துள்ளது. அதன்படி, கோவை, நீலகிரி, கரூர், திருப்பூர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்சென்னை, கள்ளக்குறிச்சி, ஆரணி அல்லது வேலூர் ஆகிய 10 தொகுதிகளைக் கேட்டுப் பெறுவது என்பதில் பாஜக தலைமையிடம் முடிவு செய்துள்ளது. இதில், 2 தொகுதிகளை தோழமை கட்சிகளுககு ஒதுக்கலாம் எனத் தெரிகிறது. நமக்கு கிடைத்த தகவலின்படி, கள்ளக்குறிச்சியை இந்திய ஜனநாயக கட்சியின் ரவிபச்சமுத்துவிற்கும், ஆரணி அல்லது வேலூரை, புதிய நீதி கட்சியின் ஏசி சண்முகத்திற்கும் ஒதுக்கவும் முடிவு செய்துள்ளது. இவர்கள் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதால், இவர்களும் பாஜக வேட்பாளர்களாகவே பார்க்கப்படுவார்கள்.
பேச்சுவார்த்தை:
இந்த 10 தொகுதிகளில் பெரிய அளவு சமரசம் செய்துக் கொள்ள வேண்டாம் என்பதில் பாஜக தலைமையகம் உறுதியாக இருப்பதாக டெல்லி தகவல்கள் உறுதி செய்கின்றன. மேலும், இதன் அடிப்படையில்தான், கூட்டணி பேச்சும் தொடங்கும் என்ற வகையில் கூறப்படுகிறது. இது தொடர்பாக, அதிமுக-வின் பொதுச் செயலாளரும் மற்ற முன்னணி நிர்வாகிகளும் கூட்டணி பேச்சின் போது முடிவெடுப்பார்கள் என பெயர் சொல்ல விரும்பாத அதிமுக முன்னணி நிர்வாகிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
சீறும் அதிமுக..!
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா என அண்ணாமலை கூறியதை, அதிமுக-வினர் ரசிக்கவில்லை. அதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. மாமூல் வாங்கிய அண்ணாமலை, கூட்டணியில் விருப்பமில்லை என்றால் வெளியேறுங்கள் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். எனவே, கூட்டணி வருமா, இல்லையா அல்லது வெற்று சலசலப்புடன் தற்போதைய சூழல் கடந்து போகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், நாம் குறிப்பிட்ட 10 தொகுதிகளில் போட்டியிடுவதில் பாஜக உறுதியாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.