தாஜ்மஹால் காதலின் சின்னமா? ஷாஜகானின் காதல் குறித்து சர்ச்சையாக பேசிய பாஜக எம்எல்ஏ..!
உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை இடிக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ ரூப்ஜோதி குர்மி பேசியுள்ளார்.
பாஜக தலைவர்கள் சர்ச்சையாக பேசுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, இஸ்லாமியர்கள் கட்டிய நினைவு சின்னத்தை இடிக்க வேண்டும், இஸ்லாமிய பெயர்களை கொண்ட இடங்களுக்கு வேறு பெயர்களை சூட்ட வேண்டும் என பாஜக தலைவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பாஜக எம்எல்ஏ:
அதன் தொடர்ச்சியாக, அஸ்ஸாமில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை இடிக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ ரூப்ஜோதி குர்மி பேசியுள்ளார். காதலின் சின்னமாக கருதப்படும் தாஜ் மஹாலை கட்டியவர் ஷாஜகான்.
முகலாய பேரரசரான ஷாஜகான், தனது மனைவி மும்தாஜ் மீதான காதலை வெளிப்படுத்தும் விதமாக தாஜ் மஹாலை கட்டினார். ஆனால், ஷாஜகானின் காதல் குறித்து தற்போது கேள்வி எழுப்பியுள்ள பாஜக எம்எல்ஏ, "தாஜ்மஹாலை காதலின் நினைவுச்சின்னம் என்று அழைக்க முடியாது.
ஏனென்றால் ஷாஜகானுக்கு பல மனைவிகள் இருந்தனர். இது அவர் தனது மனைவி மும்தாஜை நேசிக்கவில்லை என்பதை நிரூபிக்கிறது. தாஜ்மஹால் உண்மையில் மும்தாஜுக்கு அர்ப்பணிக்கப்பட்ட காதல் நினைவுச்சின்னம் என்றால், ஷாஜஹான் இறந்த பிறகு ஏன் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார்? இதை நாம் நம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கக் கூடாது.
ஷாஜகான், தாஜ்மஹாலைக் கட்டுவதற்கான நிதியை திரட்டுவதற்காக இந்து சாம்ராஜ்யங்களைக் கொள்ளையடித்தார். மேலும், முகலாய காலத்து நினைவுச்சின்னங்களான தாஜ்மஹால் மற்றும் குதுப்மினார்க்கு பதிலாக கோயில்களைக் கட்டுமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுக்கிறேன்.
பிரதமர் மோடிக்கு கோரிக்கை:
தாஜ்மஹால் மற்றும் குதுப்மினார் உடனடியாக இடிக்கப்பட வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்துகிறேன். இந்த இரண்டு நினைவுச் சின்னங்களுக்குப் பதிலாக உலகின் மிக அழகான கோயில்கள் கட்டப்பட வேண்டும். அந்த இரண்டு கோயில்களின் கட்டிடக்கலை வேறு எந்த நினைவுச்சின்னங்களும் அவற்றை நெருங்க முடியாத வகையில் இருக்க வேண்டும்" என்றார்.
கடந்த 2014ஆம் ஆண்டு, பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே, பல பாரம்பரிய நினைவு சின்னங்கள், இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, இஸ்லாமிய பெயர் கொண்ட இடங்களின் பெயர் மாற்றப்பட்டு வருவதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் கூட, குடியரசு தலைவர் மாளிகையில் அமைந்துள்ள தோட்டத்திற்கு அமிர்த உத்யன் என பெயர் மாற்றப்பட்டது. நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெயர் மாற்றப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. முன்னதாக, இது முகலாயர் தோட்டம் என அழைக்கப்பட்டு வந்தது.
மத்திய அரசின் பெயர் மாற்றும் படலத்தின் தொடர்ச்சியாக, டெல்லியில் உள்ள கிங்ஸ்வே சாலைக்கு ராஜ்பாத் சாலை என்றும் குயின்ஸ்வே சாலைக்கு ஜன்பத் சாலை என்றும் பெயர் மாற்றப்பட்டது.