Haryana Politics: ஹரியானாவில் கவிழ்கிறதா பாஜக அரசு? ஆப்பு வைத்த முன்னாள் கூட்டாளி.. ஆளுநருக்கு பறந்த கடிதம்!
ஹரியானாவில் கூட்டணி கட்சி தனது ஆதரவை திரும்ப பெற்றதையடுத்து அங்கு பாஜக தலைமையிலான அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், பாஜகவுக்கு பேரிடி விழுந்துள்ளது. ஹரியானாவில் கூட்டணி கட்சி தனது ஆதரவை திரும்ப பெற்றதையடுத்து அங்கு பாஜக தலைமையிலான அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஹரியானாவில் பாஜக அரசு கவிழ்கிறதா?
ஹரியானாவில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக ஹரியானா மாநிலத்தை பாஜக ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2014 மற்றும் 2019இல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.
கடந்த 2014ஆம் ஆண்டு, தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்த நிலையில், 2019ஆம் ஆண்டு அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளில் 40 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக, 10 தொகுதிகளில் வென்ற ஜனநாயக ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது.
ஏற்கனவே முதலமைச்சராக பதவி வகித்து வந்த மனோகர் லால் கட்டார் முதலமைச்சராகவும் ஜனநாயக ஜனதா கட்சியின் நிறுவனர் துஷ்யந்த் சவுதலா துணை முதலமைச்சராக பொறுப்பேற்றனர். அங்கு, நான்கரை ஆண்டுகளாக கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது.
வேட்டுவைத்த முன்னாள் துணை முதலமைச்சர்:
மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால் இரண்டு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி முறிந்தது. இதனால், பாஜக அரசுக்கான தனது ஆதரவை ஜனநாயக ஜனதா கட்சி திருமப்பெற்றார். இதையடுத்து, மனோகர் லால் கட்டார் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய முதலமைச்சராக பாஜகவின் நைப் சிங் சைனி பதவியேற்றார். ஹரியானா அரசியலில் தொடர் பதற்றம் நிலவி வந்த நிலையில், பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 3 சுயேட்சைகளும் திரும்ப பெற்றனர். இதனால், 90 இடங்கள் கொண்ட ஹரியானா சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 40ஆக குறைந்தது.
இந்த நிலையில், ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவரும் முன்னாள் துணை முதலமைச்சருமான துஷ்யந்த் சவுதலா கடிதம் எழுதியுள்ளார். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடக்கப்போவது என்ன?
"சமீபத்திய சிலர் ராஜினாமா செய்திருப்பதாலும் அரசுக்கு அளித்த வந்த ஆதரவை திரும்ப பெற்றிருப்பதாலும் மைனாரிட்டி அரசாக பாஜக கூட்டணி தத்தளித்து வருகிறது. எனவே, அரசாங்கத்தின் பெரும்பான்மையை நிரூபிக்க உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என துஷ்யந்த் சவுதலா கடிதத்தில் குறிப்பிடப்பிட்டுள்ளது.
ஹரியானாவை பொறுத்தவரையில், பாஜகவுக்கு 40 எம்எல்ஏக்கள் உள்ளனர். மற்றபடி, காங்கிரஸ் கட்சிக்கு 30 எம்எல்ஏக்களும் ஜனநாயக ஜனதா கட்சிக்கு 10 எம்எல்ஏக்களும் உள்ளனர். பாஜக அரசாங்கத்திற்கு ஆதரவாக 2 சுயேட்சைகளும் ஹரியானா லோகித் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவரும் உள்ளனர்.
பாஜக அரசாங்கத்திற்கு எதிராக 4 சுயேட்சைகள் உள்ளனர். இரண்டு இடங்கள் காலியாக உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 45 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.