சைரனுடன் 400 கார்கள்.. 300 கிமீ பயணம்.. பந்தாவாக சென்று காங்கிரஸில் இணைந்த பாஜக எம்எல்ஏ..!
சிவ்பூரி மாவட்டத்தில் இருந்து மத்திய பிரதேச தலைநகர் போபால் வரையில் சுமார் 300 கிமீக்கு தனது ஆதரவாளர்களுடன் 400 கார்களில் சென்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் பைஜ்நாத் சிங்.
பாஜக ஆளும் முக்கியமான மாநிலங்களில் ஒன்று மத்தியப் பிரதேசம். கடந்த 2003ஆம் ஆண்டு முதல் இடையில் ஓராண்டை தவிர கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் பாஜக தொடர்ந்து ஆட்சி செய்து வரும் மாநிலம். பாஜக ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
காங்கிரஸ் ஆட்சி கவிழ்வதற்கு காரணமான எம்எல்ஏ:
ஆனால், முதலமைச்சர் பதவியை பெறுவதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத், இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கு இடையே தொடர் போட்டி நிலவி வந்தது. கமல் நாத்துக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டதால் சிந்தியா அதிருப்தியில் இருந்து வந்தார்.
இறுதியில், சொந்த கட்சிக்கு எதிராக போர்க்கோடி தூக்கிய சிந்தியா, தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்தார். இதனால், ஆட்சி அமைத்த ஒரே ஆண்டில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். பாஜக ஆட்சி அமைப்பதற்கு காரணமான சிந்தியாவுக்கு மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
மத்திய பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் இந்தாண்டு இறுதியுடன் முடிவடைகிறது. எனவே, மத்தியப் பிரதேசத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் ஆட்சி கவிழ்வதற்கு காரணமான சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்களில் ஒருவரான பைஜ்நாத் சிங், தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்துள்ளார். சிவ்பூரி மாவட்டத்தின் செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாக பைஜ்நாத் சிங் திகழ்கிறார்.
400 கார்களில் பந்தவாக சென்று காங்கிரஸ் கட்சியில் மீண்டும் ஐக்கியம்:
தனக்கு எந்தளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை காட்டும் வகையில் சிவ்பூரி மாவட்டத்தில் இருந்து மத்திய பிரதேச தலைநகர் போபால் வரையில் சுமார் 300 கிமீக்கு தனது ஆதரவாளர்களுடன் 400 கார்களில் சென்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் பைஜ்நாத் சிங்.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு பாஜக தலைமையிடம் பைஜ்நாத் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், பாஜக மேலிடத்தில் இருந்து எந்த வித உத்தரவாதமும் வழங்கப்படாக சூழலில், காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்துள்ளார். போபாலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத், திக்விஜய சிங் ஆகியோர் தலைமையில் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸில் ஐக்கியமானார் பைஜ்நாத்.
பைஜ்நாத் சிங்குடன், பாஜகவின் 15 மாவட்ட அளவிலான தலைவர்கள் காங்கிரசுக்கு கட்சி மாறியுள்ளனர். திரைப்படத்தில் வருவது போல, சைரனுடன் 400 கார்களில் பைஜ்நாத் தனது ஆதரவாளர்களுடன் சென்றிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சட்டத்தின்படி, அவசரகால சேவைகளை வழங்கும் வாகனங்கள் மட்டுமே சாலையில் சைரன்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. சில சூழ்நிலைகளில் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்புப் படைகள் மற்றும் காவல்துறை ஆகியவை இதில் அடங்கும். ஆனால், அரசியல்வாதிகள் பெரும்பாலும் அதை அதிகாரத்தின் சின்னமாக காட்ட பயன்படுத்துகிறார்கள்.