Bihar Assembly Election 2025: அடம்பிடிக்கும் சிராக் பஸ்வான்.. இன்று தொகுதி பங்கீடு அறிவிப்பு - சூடுபிடிக்கும் பீகார் தேர்தல்
பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கூட்டணி பங்கீட்டை தேசிய ஜனநாயக கூட்டணி இன்று அறிவிக்க உள்ளது.

நாடு முழுவதும் தற்போது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள தேர்தல் பீகார் சட்டமன்ற தேர்தல் ஆகும். பீகாரில் அடுத்த மாதம் 11 மற்றும் 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இதுவரை தொகுதிப் பங்கீடு முறைப்படுத்தப்படவில்லை.
பீகார் சட்டமன்ற தேர்தல்:
நிதிஷ்குமாரின் ஜனதா தளம் மற்றும் பாஜக தலா 100 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில், மீதமுள்ள 43 தொகுதிகளில் கூட்டணி கட்சியை போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானின் தலைமையில் இயங்கி வரும் லோக் ஜனசக்தி இந்த தேர்தலில் தங்களுக்கு அதிக இடங்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதிக தொகுதி கேட்கும் சிராக் பஸ்வான்:
சிராக் பஸ்வான் தனக்கு 40 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார். பின்னர், தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர் 35 தொகுதிகளில் போட்டியிட ஒப்புக்கொண்டார். ஆனாலும், தான் கேட்கும் தொகுதிகளை லோக் ஜனசக்திக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி தாங்கள் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. சிராக் பஸ்வானின் தயவு ஆட்சியில் தேவைப்பட்டதன் காரணமாகவே அவருக்கு மத்திய அமைச்சர் பதவியை பாஜக வழங்கியுள்ளது. தற்போது சிராக் பஸ்வான் இதன் எதிரொலியாகவே தாங்கள் கேட்கும் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
குறிப்பாக, லோக் ஜனசக்தி கேட்கும் தொகுதிகளில் சில ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக போட்டியிடுவதற்காக ஏற்பாடு செய்துள்ள தொகுதிகள் ஆகும். இதில்,கோவிந்த்கஞ்ச், மதிஹானி, சிக்கந்தரா,பிராம்பூர் சட்டமன்ற தொகுதிகளையும் சிராக் பஸ்வான் கேட்பது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று தொகுதி பங்கீடு:
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இன்னும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாதது கூட்டணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த சூழலில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இன்று அறிவிக்கப்பட உள்ளது. அதேசமயம், மறுமுனையில் இந்த முறை ஆட்சியை கைப்பற்ற தேஜஸ்வி யாதவ் - காங்கிரஸ் கூட்டணி தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் பாஜக, விகாஸ்ஷீல் இன்சான் கட்சி, ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா, லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஹிந்துஸ்தானி ஆவாம் கட்சிக்கு குறைவான இடங்களே ஒதுக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் ஜிதன்ராம் மஞ்சி அதிருப்தியில் உள்ளார்.





















