கெட்டுப்போன மதிய உணவு...மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 37 சிறுவர்கள்!
மாணவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக கிழக்கு சம்பாரனின் சிவில் சர்ஜன் அஞ்சனி குமார் தெரிவித்துள்ளார்.
பீகாரின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தின் பகாரிதயல் உட்பிரிவில் உள்ள கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில், மதிய உணவை உட்கொண்ட 37 குழந்தைகள் மற்றும் ஒரு சமையல்காரருக்கு உடல் நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனையடுத்து நேற்று (ஜூலை.27) மாலை உடல்நிலை சரியில்லாத அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தை இன்று (ஜூலை.28) உறுதிப்படுத்திய பகாரிதயலின் துணைப் பிரிவு மாஜிஸ்திரேட் குமார் ரவீந்திரா , சிஷானி கிராமத்தில் உள்ள ராஜ்கியா மத்திய வித்யாலயாவைச் சேர்ந்த 37 மாணவர்கள் தங்கள் கிராமப் பள்ளியில் மதிய உணவை சாப்பிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு மனச்சோர்வு, வயிற்று வலி என புகார் அளித்ததாகக் கூறியுள்ளார்.
"விஷயம் எங்கள் கவனத்துக்கு வந்தவுடன், உடனடியாக அவர்களது வீடுகளில் இருந்து பகாரிதயலில் உள்ள துணை மருத்துவமனையில் அவர்களை அனுமதிக்கக் கூட்டிச் செல்ல ஏற்பாடு செய்தோம்," என்று துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முன்னதாக மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக கிழக்கு சம்பாரனின் சிவில் சர்ஜன் அஞ்சனி குமார் கூறினார்.
மேலும், "முதன்மையாக, இந்த நோய் உணவின் நச்சுத் தன்மையால் ஏற்பட்டுள்ளது எனத் தோன்றுகிறது. இந்த மாணவர்கள் 24 மணி நேரம் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், உணவு மாதிரியை பரிசோதித்த பிறகே சரியான காரணம் தெரியவரும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெயின் தரம் குறைந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
"சமையல் எண்ணெயில் ஏதோ பிரச்சனை இருப்பதாக சமையல்காரர் சந்தேகிக்கிறார். மாவட்ட கல்வி அதிகாரி இது குறித்து விசாரணை நடத்தி, சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று எஸ்டிஎம் குமார் தெரிவித்துள்ளார்.