ஓசூர் விமான நிலையத்திற்குள் பெங்களூருவில் இரண்டாவது விமான நிலையம்: கர்நாடக அரசின் அதிரடி திட்டம் என்ன?
தெற்கு பெங்களூரு பகுதியிலேயே இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும். இல்லையெனில், அங்குள்ள பயணிகள் ஓசூரை மாற்று விமான நிலையமாகப் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள்.

ஓசூரில் விமான நிலையம் அமைவதற்குள் பெங்களூருவில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க கர்நாடக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு பெங்களூரூவில் விமான நிலையம்
பெங்களூரு மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க முன்மொழியப்பட்ட மூன்று இடங்களையும் ஒப்புதல் அளிக்கும் முன் தீர்க்க வேண்டிய முக்கிய சவால்களை இந்திய விமான நிலைய ஆணையம் முன்வைத்த நிலையில், மாநில அரசு தற்போது தெற்கு பெங்களூரு பகுதிகளை, குறிப்பாக கனகபுரா சாலை மற்றும் பன்னேர்கட்டா சாலை வழித்தடங்களை முன்னுரிமையாகக் கருதுகிறது. இதற்குக் காரணம், அந்த பகுதிகளில் மேம்பட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சிறந்த இணைப்புத் தன்மை காணப்படுவது.
தமிழ்நாட்டின் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்க முயற்சி மேற்கொண்டிருப்பது, கர்நாடக அரசின் திட்டத்துக்கு கூடுதல் அவசரத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், ஓசூர் விமான நிலையம் தெற்கு பெங்களூரில் இருந்து பயணிகளை ஈர்க்கும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையம் தனது வடிவமைப்பு திறனை மீறிய அளவுக்கு பயணிகள் வருகையைக் கையாளுகிறது. இதனால், அடுத்த பத்து ஆண்டுகளில் இரட்டிப்பாகும் தேவையை சமாளிக்க இரண்டாவது விமான நிலையம் அவசியமாகும் என்று அம்மாநில அரசு கருதுகிறது. எனினும், நகரத்திலிருந்து 100–120 கி.மீ. சுற்றளவில் பொருத்தமான நிலத்தை அடையாளம் காணுவது சவாலாக உள்ளது. சுற்றுச்சூழல், நிதி மற்றும் வான்வழி கட்டுப்பாடுகள் ஆகியவை ரூ.10,000 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தை தாமதப்படுத்தக்கூடும் என்று தெரிகிறது.
ஓசூரில் விமான நிலையம்
அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகளை மதிப்பீடு செய்ததில், அதிகபட்சமாக 8.5 கோடி பயணிகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய திறனில் குறைந்தது 4 கோடி பயணிகள் தெற்கு பெங்களூரிலிருந்து வருகின்றனர் என்பது தெரிகிறது. இதனால், தெற்கு பெங்களூரு பகுதியிலேயே இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும். இல்லையெனில், அங்குள்ள பயணிகள் ஓசூரை மாற்று விமான நிலையமாகப் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள் என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக அம்மாநிலத்தின் தொழிற்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறியதாவது: விரிவான சாத்தியக்கூறு ஆய்வு முடியும் வரை அரசு எந்த இடத்தையும் இறுதி முடிவு செய்யாது. மூன்று இடங்களும் பிரபல ஆலோசகரால் தொழில்நுட்ப-சாத்தியக்கூறு ஆய்விற்காக தேர்வாகும்.
புதிய பசுமை நில திட்டங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கான சாத்தியக்கூறு ஆய்வில் அனுபவமுள்ள நிறுவனங்களே இந்த டெண்டருக்கான முன்தகுதி நிலையைப் பெறும். ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை எந்த இடத்தையும் தேர்வு செய்வதில்லை என்று கூறிய அவர், இறுதி அறிக்கை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.





















