10 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. நைஜீரியா பெண்ணை நடுரோட்டில் மடக்கி பிடித்த அதிகாரிகள்.. ஒரே ஷாக்
10 கோடி ரூபாய் மதிப்புள்ள எம்டிஎம்ஏ படிகங்களை எடுத்துச் சென்றதாக மத்திய குற்றப்பிரிவின் (சிசிபி) போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால், 25 வயது நைஜீரியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூருவில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 5.325 கிலோகிராம் எம்டிஎம்ஏ படிகங்களை எடுத்துச் சென்றதாக மத்திய குற்றப்பிரிவின் (சிசிபி) போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால், 25 வயது நைஜீரியப் பெண் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
சிக்கியது 10 கோடி மதிப்பிலான போதைப்பொருள்:
எல்லை பகுதிகள் வழியாக நாட்டுக்குள் தங்கம், போதை பொருள் ஆகியவை கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலை அளித்து வருகிறது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு வடக்கில் ராஜனுகுண்டே பிரதான சாலையில் உள்ள தாராஹுனாசே கிராமத்தில் அகின்வுன்மி பிரின்சஸ் இஃபியோலுவா என்ற நைஜீரியா பெண் கைது செய்யப்பட்டார். ரகசிய தகவலின் பேரில், டெல்லியில் இருந்து போதைப்பொருள் அடங்கிய பையுடன் வந்தபோது சிசிபி அதிகாரிகள், அவரை வழிமறித்து கைது செய்தனர்.
நைஜீரியா பெண்ணை நடுரோட்டில் மடக்கி பிடித்த அதிகாரிகள்:
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "டெலிவரி செய்ய வந்துள்ளார். ஆப்பிரிக்க வியாபாரிகள் குழுவிடம் போதைப்பொருட்களை ஒப்படைக்க வந்திருந்தார். அந்தப் பகுதியில் இரண்டு ஸ்கூட்டர்களில் நான்கு ஆண்கள் இருப்பதைக் கண்டோம். ஆனால், அவர்கள் பார்சலை எடுக்கவில்லை. பையுடன் நின்று கொண்டிருந்தபோது பிரின்சஸ் கைது செய்யப்பட்டார்" என்றார்.
இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "அந்தப் பையில் 11 புதிய சுரிதார்களும் இருந்தன. விசாரணையின் போது, பிரின்சஸ் பையில் உள்ள உள்ளடக்கங்கள் தனக்குத் தெரியாது என்றும், டெல்லியில் உள்ள ஒரு நண்பர் அதை கருப்பு தொப்பி அணிந்த ஒருவரிடம் ஒப்படைக்கச் சொன்னார் என்றும் கூறினார்.
அதிகாரிகளுக்கு ஷாக் தரும் தகவல்கள்:
ஒரு சலூன் தொடங்க பெங்களூருக்கு வந்ததாகவும் அவர் கூறினார். தான் நைஜீரிய அரசு ஊழியரின் மகள் என்று அவர் கூறிக்கொண்டார், ஆனால், கூடுதல் விவரங்களைப் பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டார். 2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், அவர் வணிக விசாவில் இந்தியா வந்தார்.
பின்னர், தெலங்கானாவில் உள்ள ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் படிக்க மாணவர் விசாவைப் பெற்றதாக அவர் கூறினார். ஆனால், அவர் பல்கலைக்கழகத்தில் சேரவில்லை. கடந்த 2022இல், அவரது விசா காலாவதியானது, அன்றிலிருந்து அவர் சட்டவிரோதமாக தங்கியுள்ளார்.
டெல்லியில் உள்ள அவரது காதலன் குறித்து நம்பகமான தடயங்கள் கிடைத்துள்ளன. அவர் தலைமறைவாக உள்ளார். மேலும் விசாரணைக்காக அவர் போலீஸ் காவலில் எடுக்கப்பட உள்ளார். அவர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுவாகும். நாட்டில் வேறு எங்கும் வழக்குகள் உள்ளதா என்பதை நாங்கள் இன்னும் சரிபார்க்கவில்லை" என்றார்.





















