பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
புகைப்படத்தில் உள்ள நபர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்புடைய குற்றவாளிகளின் புகைப்படத்தை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து என்.ஐ.ஏ தனது எக்ஸ் தளத்தில் பின்வருமாறு குறிப்பிட்டதாவது, "புகைப்படத்தில் உள்ள நபர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும். தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் வெளியே கசியாமல் பாதுகாக்கப்படும்" என தெரிவித்துள்ளது.
பரபரப்பை கிளப்பிய பெங்களூரு குண்டுவெடிப்பு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த 1ஆம் தேதி குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் 10 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் மட்டுமில்லாமல், நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பெங்களூரு போலீசார் எட்டு தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சந்தேகிக்கப்படும் நபர்கள் வாடிக்கையாளர் போல் ஹோட்டலுக்குள் நுழைந்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அவர் கருப்பு பேண்ட், சட்டை, வெள்ளை தொப்பி, கருப்பு கண்ணாடி, முகக்கவசம் அணிந்திருந்தது சிசிடிவி கேமராவில் பதிவானது மூலம் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
முக்கிய தகவல்களை வெளியிட்ட என்.ஐ.ஏ:
இதனிடையே, ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டு வைத்தவர் அடையாளம் காணப்பட்டதாக என்.ஐ.ஏ நேற்று தகவல் வெளியிட்டது. குண்டு வைத்தவரின் பெயர் முசாவிர் ஷாஜிப் ஹுசைன் என்றும் இந்த சதி திட்டத்தை தீட்டியவர் அப்துல் மாதீன் தாஹா என்றும் என்.ஐ.ஏ தெரிவித்தது.
BREAKING: NIA releases new photos of Rameshwaram Cafe blast accused, announces Rs 10 lakh reward for information on 'bomber' Mussavir Hussain Shazib & conspirator Abdul Matheen Ahmed Taahaa, both suspected members of Shivamogga ISIS module. (Via @NIA_India) pic.twitter.com/gxpAqdNC2l
— Shiv Aroor (@ShivAroor) March 29, 2024
இருவரும் கர்நாடக மாநிலம் தீர்த்தஹள்ளியை சேர்ந்தவர்கள். பல்வேறு தீவிரவாத வழக்குகளில் பாதுகாப்பு அமைப்புகளால் தேடப்பட்டு வருகிறார்கள் என என்.ஐ.ஏ தெரிவித்திருந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு, மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும் இவர்களே மூளையாக செயல்பட்டனர் என்றும் என்.ஐ.ஏ தெரிவித்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடகாவில் 12 இடங்களிலும் தமிழ்நாட்டில் 5 இடங்களிலும் உத்தரப் பிரதேசத்தில் ஒரு இடத்திலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதையும் படிக்க: வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!

