Bomb Threat: 44 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; குழந்தைகளை மீட்க பதறியடித்த பெற்றோர்கள்; காவல்துறை தீவிர விசாரணை
Bengaluru Bomb Threat: உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு பள்ளிகளில் சந்தேகப்படும்படியான பொருட்கள் ஏதும் இருக்கிறதா என சோதனை நடத்தினர்.
பெங்களூரில் உள்ள 44 தனியார் பள்ளிகளுக்கு இன்று அதாவது டிசம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக போலீசார் தெரிவித்தனர். பள்ளி வளாகத்தில் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருப்பதாக அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர். இதை அறிந்த குழந்தைகளின் பெற்றோர்கள் பதறியடித்துக் கொண்டு பள்ளிகளில் இருந்து குழந்தைகளை அழைத்துச் செல்ல பள்ளியில் ஒரே நேரத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு பள்ளிகளில் சந்தேகப்படும்படியான பொருட்கள் ஏதும் இருக்கிறதா என சோதனை நடத்தினர். குறிப்பாக வைட்ஃபீல்ட், கோரமங்களா, பஸ்வேஷ்நகர், யலஹங்கா, சதாசிவநகர் உள்ளிட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் படைகள் அனுப்பப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்த கர்நாடகாவையே உலுக்கியுள்ள இந்த விவகாரம் குறித்து, கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், ”மின்னஞ்சலின் மூலத்தை நாங்கள் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். இதை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். இதை விரைவில் கண்டுபிடிக்க காவல்துறைக்கு தெரிவித்துள்ளேன்" என்றார்.
இந்த விவகாரம் குறித்து பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் தியானந்த் கூறுகையில், “பள்ளிகளுக்கு வந்த மின்னஞ்சல்கள் புரளி என எடுத்துக்கொண்டாலும், காவல்துறை இதனை மிகவும் சாதாரணமாக எடுக்கவில்லை, மேலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது" எனக் கூறினார். இது மட்டும் இல்லாமல் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார் தியானந்த். அதில் அவர், “ இன்று காலை பெங்களூருவில் உள்ள சில பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் அடங்கிய மின்னஞ்சல் வந்துள்ளது. இது குறித்து காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டதும், உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு வீரர்களை அனுப்பி வைக்கப்பட்டு தீவிரமான சோதனை நடத்தப்பட்டது. இதை யாரோ வேண்டுமென்றே விளையாட்டுத் தனமாக செய்திருந்தாலும், குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது.
வெடிகுண்டு மிரட்டல் மிரட்டல் வந்த பின்னர், பள்ளி ஒன்று பெற்றோருக்கு அனுப்பிய தகவலில், "பள்ளியில் இன்று நாங்கள் எதிர்பாராத சூழ்நிலையை எதிர்கொள்கிறோம். பள்ளிக்கு, அடையாளம் தெரியாதவர்களிடம் இருந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் வந்துள்ளது. நாங்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், மாணவர்களை உடனடியாக வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்" என்று கூறியுள்ளது.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இது தொடர்பாக பெற்றோர்களுக்கு அளித்த உத்திரவாதத்தில், "முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, மேலும் பெற்றோர்கள் பீதியடையத் தேவையில்லை. போலீசார் விசாரணை நடத்துவார்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, பெற்றோர்கள் பீதியடைய தேவையில்லை. பள்ளிகளை ஆய்வு செய்து பாதுகாப்பை அதிகரிக்க போலீசாருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். காவல் துறையிடம் இருந்து முதற்கட்ட அறிக்கை பெறப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் ஒன்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரின் வீட்டிற்கு அருகில் உள்ளது.
இது தொடர்பாக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறுகையில், "இந்த விவகாரம் தொடர்பாக நான் முதலில் தொலைக்காட்சியைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். எனது வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளி உட்பட எனக்கு தெரிந்த சில பள்ளிகளின் பெயர்களும் செய்தியில் கூறப்பட்டதால், இது குறித்து தெளிவாக தெரிந்து கொள்ள சரிபார்க்க வெளியே சென்றேன். அதன் பின்னர் காவல் துறை தரப்பில் எனக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. இது ஒரு புரளி என்று தோன்றுகிறது. நான் காவல்துறையிடம் பேசினேன். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஆனால் கவலைப்படத் தேவையில்லை. பெற்றோர்கள் கவலைப்படுவது புரிந்துகொள்ளத்தக்கது, ஆனால் காவல்துறை நிலைமையைக் கையாளுகிறது. சிலர் விளையாட்டுத் தனமாக இதைச் செய்திருக்கலாம். 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைப் பிடிப்போம். சைபர் கிரைம் போலீஸார் இந்த விஷயத்தை தீவிரமாக விசாரித்து தங்கள் வேலையை விடாமுயற்சியுடன் செய்கிறார்கள். மேலும் நமது இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளை புறக்கணிக்க வேண்டாம்," என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு பெங்களூருவில் உள்ள 7 பள்ளிகளுக்கு இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும் ஆனால் அது புரளி என்றும் போலீசார் தெரிவித்தனர்.