Bengaluru: இளைஞரின் உயிரை பறித்த கிளி.. மின்சாரம் தாக்கி பலியான நபர்!
பெங்களூருவின் கிரிநகர் பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருண் குமார் என்ற இளம் தொழிலதிபர் ஒருவர் மக்கா வகை கிளி ஒன்றை வளர்த்து வருகிறார்.

கர்நாடகா மாநிலத்தில் இளம் தொழிலதிபர் ஒருவர் தான் ஆசையாக வளர்த்த கிளியால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்க்கப்படுகிறது. நாய், பூனை, கிளி, புறா என பலவகை இதில் அடங்கும். செல்லப்பிராணிகள் நம் மனதிற்கும், சுற்றுச்சூழலுக்கும் நன்மை என சொல்லப்படும் அதே வேளையில் அவைகளால் உடல்நலம் பாதிப்பு, மரணம் வரை நிகழவும் செய்யும். அப்படி ஒரு சம்பவம் தான் கர்நாடாகவில் நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள பெங்களூருவின் கிரிநகர் பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருண் குமார் என்ற இளம் தொழிலதிபர் ஒருவர் மக்கா வகை கிளி ஒன்றை வளர்த்து வருகிறார். செல்லப்பிரணியான இதன் விலை ரூ.2.5 லட்சம் என சொல்லப்படுகிறது. இதனிடையே டிசம்பர் 12ம் தேதியான நேற்று காலையில் அந்த கிளியானது வீட்டிலிருந்து பறந்து அருகிலுள்ள மின் கம்பத்தில் விழுந்தது.
இதனைத் தொடர்ந்து கிளியை மீட்கச் சென்ற அருண்குமார் ஒரு கையில் இரும்பு பைப் குழாயுடன் போனார். கிளி இருந்த இடத்தின் அருகிலிருந்த காம்பவுண்ட் சுவர் மீது ஏறி மீட்பு பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு பைப் மேலே சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் பட்டதால் அருண்குமார் மீது கடும் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அருண்குமார் வாகன எண் தகடு தயாரிக்கும் தொழிலை மேற்கொண்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
டெல்லியில் மற்றொரு சம்பவம்
மின்சாரம் எவ்வளவு ஆபத்தானது என்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தொடர் மரணங்கள் நிகழ்வது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இப்படியான நிலையில்
தென்மேற்கு டெல்லியின் மஹிபால்பூர் என்ற பகுதியில் வசித்து வரும் 23 வயது பெண் ஒருவர் தனது வீட்டில் மின்சார கம்பியால் தண்ணீரை சூடாக்கும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், டெல்லியில் கடும் குளிர் வாட்டி வதைக்கும் நிலையில் அந்தப் பெண் குளிக்கச் சென்றதாகவும், வழக்கமாக மின்சார கம்பியைப் பயன்படுத்தி தண்ணீரைச் சூடுபடுத்துவதும் வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால், அதே கட்டிடத்தில் வசிக்கும் அவரது தோழி, சென்று பார்த்தபோது, கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார். பின்னர் அவர் காவல்துறையினரை உதவிக்கு அழைத்த நிலையில் இந்த சோக சம்பவம் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.





















