Bangalore Bandh: பெங்களூரு பந்த் வாபஸ்.. சமரசத்துக்கு வந்த கர்நாடக அரசு.. பயணிகள் நிம்மதி..!
வருவாய் இழப்பை ஈடுகட்ட மகளிருக்கான சக்தி திட்டத்தின் கீழ் தனியார் பஸ்களையும் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
கர்நாடக மாநில அரசின் தலையீட்டுக்குப் பிறகு பெங்களூருவில் நடைபெற்று வந்த தனியார் பேருந்துகள், வாகனங்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.
சக்தி மகளிர் திட்டம்
கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைமையேற்ற பின் தமிழ்நாட்டில் உள்ளது போல் பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணத் திட்டம் கர்நாடகாவில் தொடங்கப்பட்டுள்ளது. சக்தி திட்டம் எனும் பெயரில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்தால் தனியார் பேருந்துகள், வாடகை கார்கள், ஆட்டோக்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு, எதிர்ப்புகள் எழுந்தன. கடந்த ஜூலை மாதம் முதலே எதிர்ப்புகள் வலுபெற்று வரும் நிலையில், செப்டம்பர் 11ஆம் தேதியான இன்று பந்த் அறிவிக்கப்பட்டது.
முன்னதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோருடன் தனியார் பேருந்து சங்கங்கள், உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சக்தி திட்டத்தின் கீழ் தனியார் பஸ்களையும் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், சில கோரிக்கைகளை அம்மாநில அரசு ஏற்க மறுத்த நிலையில், நள்ளிரவு தொடங்கி தனியார் வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தன.
திணறிய பெங்களூரு
இந்நிலையில், கர்நாடக மாநில அரசு தனியார் வாகன சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததையடுத்து, தனியார் போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு தற்போது வேலை நிறுத்தத்தினை வாபஸ் பெற்றுள்ளது.
கர்நாடகாவின் ஐடி தலைநகரான பெங்களூருவில் டாக்சிகள், தனியார் பேருந்துகள் என எதுவும் இயங்காத நிலையில், பெங்களூருவில் இன்று காலை முதலே பொது மக்கள் பெரும் இடையூறுகளை சந்தித்து வந்தனர்.
அரசு பேருந்தில் பயணித்த அனில் கும்ப்ளே
பொதுவாக பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில் தனியார் ஆட்டோக்கள், கார்கள், பேருந்துகளையே மக்கள் பெருவாரியாக உபயோகிக்கும் சூழல் நிலவும் நிலையில், இன்று பேருந்துகள் கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். முன்னதாக தனியார் வாகனங்கள் கிடைக்காமல், விமான நிலையத்தில் இருந்து தான் அம்மாநில அரசு பேருந்தான BMTC பேருந்தில் திரும்பும் புகைப்படத்தை அனில் கும்ப்ளே தன் இணையப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்தப் புகைப்படம் சமூகவலைதளங்களில் பெரும் வைரலானது.
BMTC trip back home today from the airport. pic.twitter.com/jUTfHk1HrE
— Anil Kumble (@anilkumble1074) September 11, 2023
பந்த் வாபஸ்
சக்தி திட்டத்தை தனியார் பேருந்துகளுக்கு நீட்டிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்று அரசு முன்னதாக தெரிவித்தது. மற்றொருபுறம் கர்நாடகாவில் தங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஆட்டோ தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. மேலும், ஓட்டுநர் நல வாரியம், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காப்பீடு, வணிக சரக்கு வாகனங்களுக்கு வாழ்நாள் வரி உள்ளிட்ட கோரிக்கைகள் என கடந்த கூட்டங்களில் மொத்தம் 30 கோரிக்கைகளை போக்குவரத்து துறையிடம் தொழிற்சங்கங்கள் முன்வைத்தன. இந்நிலையில் இந்த் வாகன நிறுத்த போராட்டம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.