Amarnath Yatra Food: தோசை, சட்னி, ஊறுகாய், பர்கருக்கு தடை.. அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவு கட்டுப்பாடு!
அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் குறிப்பிட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
![Amarnath Yatra Food: தோசை, சட்னி, ஊறுகாய், பர்கருக்கு தடை.. அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவு கட்டுப்பாடு! ban on 40 food items including dosa burger on amarnath yatra complete list here Amarnath Yatra Food: தோசை, சட்னி, ஊறுகாய், பர்கருக்கு தடை.. அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவு கட்டுப்பாடு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/24/3452e4dfc2a1afbefce054d3073e41821684942392073694_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் குறிப்பிட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆலோசனைக் கூட்டம்:
அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்காக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கினார். கூட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் இருந்து பக்தர்களைப் பாதுகாப்பது, பனிச்சரிவு போன்றவை ஏற்பட்டால் பக்தர்களை மீட்பது தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது, உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
40 உணவு வகைகளுக்கு தடை:
இந்நிலையில், அமர்நாத் யாத்திரைக்கு செல்லும்போது பக்தர்கள் குறிப்பிட்ட உணவு வகைகளை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தோசை, பர்கர் உள்ளிட்ட 40 உணவுப் பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புலாவ், பிரைடு ரைஸ், பூரி, பீட்சா, பர்கர், பரோட்டா, தோசை மற்றும் வறுத்த ரொட்டி, வெண்ணெய், கிரீம் சார்ந்த உணவுகள் மற்றும் துரித உணவுப் பொருட்களை எடுத்துச்செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரிந்துரை:
யாத்திரை செல்லும் பக்தர்கள் தங்களது ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய தானியங்கள், பருப்பு வகைகள், பச்சைக் காய்கறிகள் மற்றும் சாலட் போன்ற ஆரோக்கியமான பொருட்களையும், சில அரிசி உணவு வகைகளையும் எடுத்துச்செல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதோடு, பக்தர்கள் யாத்திரையை முன்னிட்டு ஒரு நாளைக்கு குறைந்தது 5 கிலோமீட்டர் நடைபயிற்சி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என, ஸ்ரீ அமர்நாத் கோவில் வாரிய குழு வெளியிட்ட சுகாதார ஆலோசனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை:
ஜம்மு காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகின்றனர். தெற்கு காஷ்மீர் இமயமலைப் பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் இந்த அமர்நாத் குகை கோயில் அமைந்துள்ளது. இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்குவது குறித்து அமர்நாத் கோயில் வாரிய குழு ஆளுநர் மனோஜ் சின்கா தலைமையிலான குழு விவாதித்தது. இதில் அமர்நாத் புனித யாத்திரை ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 62 நாட்கள் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
யார் யாருக்கு அனுமதி..!
அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் ஆகிய இரண்டு பாதைகளிலும் ஒரே நேரத்தில் தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 13 வயது முதல் 70 வரையிலான எந்தவொரு தனிநபரும் இந்த யாத்திரியை மேற்கொள்ளலாம். அதேநேரம், 6 வாரம் மற்றும் அதை தாண்டிய கருவுற்ற பெண்கள் யாரும் யாத்திரை மேற்கொள்ள அனுமதி இல்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)