Wayanad: 2 கோடி நிவாரணம்! கடன் வசூலிப்பது தற்காலிக நிறுத்தம் - வயநாடு துயரச்சம்பவத்தில் பஜாஜ் நிறுவனம் அறிவிப்பு
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ரூபாய் 2 கோடி நிவாரணத் தொகையை பஜாஜ் நிறுவனம் வழங்கியுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஆயிரக்கணக்கான குடும்பங்களை ஒரே நாளில் சிதைத்த இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஒட்டுமொத்த கேரளாவையும் சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்திற்கு கேரள மட்டுமின்றி அண்டை மாநிலங்களும் உதவிக்கரம் நீட்டின.
வயநாடு நிலச்சரிவுக்கு 2 கோடி நிதி:
இந்த நிலையில், இந்தியாவின் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் பின்சர்வ் நிறுவனம் வயநாடு நிலச்சரிவுக்கு நிவாரண நிதியாக ரூபாய் 2 கோடியை நேற்று வழங்கியது. கேரள மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு இணையம் மூலமாக இந்த தொகையை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து பஜாஜ் நிறுவன அதிகாரிகள் வழங்கினர்.
கடன் வசூலிப்பு நிறுத்தி வைப்பு:
மேலும், வயநாட்டில் இயல்பு நிலை திரும்பும் வரையில் அப்பகுதியில் பஜாஜ் நிறுவனத்திடம் கடன் வாங்கியவர்களிடம் கடன் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பஜாஜ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதியில் பஜாஜ் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு தொகை எடுத்து வந்தவர்களுக்கான காப்பீடு தொகை விரைவில் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளனர்.
வயநாடு கோரச் சம்பவத்தில் சிக்கியவர்களின் வாழ்வாதாரம் தற்போது வரை முழுமையாக மீளவில்லை. 400க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கிய இந்த நிலச்சரிவால் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை,. மேப்படி பகுதிகள் முற்றிலும் சிதைந்தது. மீட்பு பணியில் ராணுவம், போலீசார் என பலரும் ஈடுபட்டனர். நீண்ட நாட்களாக இந்த மீட்பு பணி நடைபெற்றது.
தொடரும் உதவிகள்:
ஒட்டுமொத்த நிலப்பரப்பும் முற்றிலும் சிதைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணி முழுவீச்சில் தற்போது வரை நடைபெற்று வருகிறது. வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்கும் வகையில் மாநில அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இந்த துயரச் சம்பவத்திற்கு உதவும் வகையில் நடிகர்கள், நடிகைகள் மட்டுமின்றி பல பிரபலங்களும் நிதி உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.