Ayodhya Ram Mandir: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பிரபலங்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! காத்திருக்கும் பரிசு
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் பிரபலங்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கோயிலின் குடமுழுக்கு விழாவானது, வரும் 22ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இது நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த இந்துக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்:
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த விழாவில், அரசியல், சினிமா, தொழில்துறை மற்றும் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களும் பங்கேற்க உள்ளனர். இதனால், ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
அயோத்தி நகரம் முழுவதிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கையாக உத்தரபிரதேச காவல்துறை, 10,000 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளது. முதல் நாள் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாது. ஜனவரி 23ஆம் தேதி முதல் மக்கள் தரிசனம் செய்து கொள்ளலாம்.
அயோத்திக்கு ஐந்து லட்ச லட்டுகள்:
இந்த நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக 5 லட்ச லட்டுகள் அனுப்பப்பட உள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மஹாகாலேஷ்வர் கோவிலில் இருந்து 5 லட்ச லட்டுகள் அயோத்தி கோயிலுக்கு இன்று அனுப்பப்படுகிறது. லட்டுகளை பேக் செய்யும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு லட்டுகளும் சுமார் 50 கிராம் எடை கொண்டது. ஏற்கனவே நான்கு லட்ச லட்டுகளை பேக் செய்யப்பட்டுள்ளது என்றும் இன்றுக்குள் மீதமுள்ள ஒரு லட்ச லட்டுகளும் பேக் செய்யப்பட்டு அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பரிசுத்தொகுப்பு என்ன?
இதோடு, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு பரிசாக ஒரு லட்ச லட்டுகளும் அனுப்பப்படுகிறது. 25 கிராம் எடை கொண்ட ஒரு லட்ச லட்டுகளை பேக்கிங் செய்யும் பணியில் ஸ்ரீவாரி சேவா குழுவைச் சேர்ந்த சுமார் 350 பேர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் பிரபலங்களுக்கு ராமஜென்ம பூமி தீர்த்த அறக்கட்டளை பரிசுத்தொகுப்பு ஒன்றை அளிக்க உள்ளது. அதில், பிரசாதத்துடன், ராமர் கோயில் புகைப்படம், காவி துண்டு, 500 கிராம் லட்டு, ராமர் உருவம் பொறித்த நாணயம், சிறிய கண்ணாடி குடுவையில் புனித மண் ஆகியவை இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது.
உத்தரபிரதேச அரசு ஏற்பாடுகள்:
இதனிடையே, ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஜனவரி 22ம் தேதி, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும் உத்தரபிரதேச அரசு விடுமுறை அறிவித்துள்ளது. விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்காக கூடார நகரம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு மூன்று வேளையும் உணவு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் பிரதமர் மோடி, பல மாநில முதலமைச்சர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், சாதுக்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளனர். இதனால், அயோத்யா நகரம் முழுவதிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், அயோத்தியில் சுமுகமான போக்குவரத்தை உறுதி செய்ய கும்பாபிஷேகம் நடக்கு ஜனவரி 21, 22ஆம் தேதிகளில் அயோத்தி டிப்போவில் பேருந்துகள் நிற்க அனுமதிக்கப்படாது. ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி தாம் சந்திப்பில் எந்தவொரு ரயில்களும் நிற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.