ஜிப்மர் மருத்துவமனையில் தரமற்ற உணவுப் பொருட்கள் வழங்கியதால் அதிகாரிகள் கேண்டீனுக்கு சீல்
புதுச்சேரியில் உள்ள அனைத்து உணவு விடுதிகளிலும் தீவிர சோதனையை முடுக்கிவிடுவது என முடிவு செய்யப்பட்டு ஒரு சிறப்பு ஆய்வு குழு அமைக்கப்பட்டது.
தரமற்ற சுகாதாரமற்ற உணவு தயாரித்து விநியோகித்ததாக மத்திய அரசுக்கு சொந்தமான ஜிப்மர் மருத்துவமனை கேன்டீனை மூடி உணவு பாதுகாப்புத் துறையினர் நோட்டீஸ் ஒட்டினர். புதுச்சேரியில் உள்ள பல்வேறு உணவு மற்றும் சிற்றுண்டி விடுதிகளில் சுகாதாரமற்ற மற்றும் தரம் குறைந்த உணவுகள் வழங்கப்படுவதாக பல தரப்பிலிருந்து உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் குவிந்தன.
சமீபத்தில் கெட்டுப்போன பிரியாணி உண்ட நுகர்வோர் ஒருவர் உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உணவு பாதுகாப்பு துறையானது, புதுச்சேரியில் உள்ள அனைத்து உணவு விடுதிகளிலும் தீவிர சோதனையை முடுக்கிவிடுவது என முடிவு செய்யப்பட்டு ஒரு சிறப்பு ஆய்வு குழு அமைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறைச்செயலர் அருண் பிறப்பித்த உத்தரவில், உணவு பாதுகாப்பு துறையின் சிறப்பு ஆய்வுகுழு மூலம் அனைத்து ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள் மற்றும் சிற்றுண்டி விடுதிகளில் இந்த வாரம் முதல் தீவிர ஆய்வுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் சுகாதரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா, காய்ச்சிய எண்ணைய் மறு சுழற்சி செய்யப்படுகிறதா, இறைச்சி மற்றும் கடல் உணவுகள் முறையாக குளிரூட்டப்படுகிறதா, உணவு தயாரிக்கும் பாத்திரங்கள் மற்றும் இடங்கள் சுத்தமாக உள்ளனவா என சோதிக்கப்படும்.
இந்த ஆய்வின் போது மேற்கண்ட விஷயங்களில் ஏதெனும் விதிமீறல்கள் இருந்தாலோ அல்லது உணவு உரிமம் மற்றும் உணவு சான்றிதழ் இல்லாமல் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டாலோ கடுமையான அபராதம் உட்பட உணவு விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். அதை தொடர்ந்து கடற்கரை சாலையில் உள்ள உயர்ரக உணவு விடுதியில் ஆய்வு செய்தபோது, காலாவதியான 250 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அந்த ஹோட்டலில் இருந்த குளிர்பதன கிடங்குக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை கேன்டீனை மூடி நோட்டீஸ் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தன்ராஜிடம் கேட்டதற்கு, மருத்துவர்கள், பொதுமக்கள், நோயாளிகள் தரப்பினர் கேன்டீனில் உணவு, ஜூஸ் குடிப்பது வழக்கம். புகார்கள் வந்ததால் ஆய்வு செய்தோம். இங்கு கெட்டுபோன காய்கறிகள் உணவுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தன.
ஜூஸ் போடும் பழங்கள் தரம் இல்லாமல் இருந்தன. கெட்டுபோன மாவு உணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் சமையல் அறை தூய்மையாக பராமரிக்கப்படவில்லை. அசுத்தமாக இருந்தது. சமையல் பாத்திரங்கள், சாப்பாட்டு பாத்திரங்கள் தூய்மையாக கழுவவில்லை. ஜிப்மர் நிர்வாகக்தின் கீழ் இந்த கேன்டீன் உள்ளது. நோட்டீஸை யாரும் வாங்காததால் கேன்டீனை மூடிவிட்டோம். அக்கதவில் நோட்டீஸ் ஒட்டியுள்ளோம் என்று குறிப்பிட்டார்.