படத்தையே மிஞ்சிடுவாங்க போல! சோப்பு பாக்ஸில் கடத்தப்பட்ட ஹெராயின்.. தட்டி தூக்கிய போலீஸ்!
அஸ்ஸாமில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை அஸ்ஸாம் காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படை சுற்றி வளைத்து பிடித்துள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை அஸ்ஸாம் காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படை சுற்றி வளைத்து பிடித்துள்ளது. அஸ்ஸாம் மற்றும் மணிப்பூரில் இந்த கும்பல் இயங்கி வந்துள்ளது. அவர்களிடம் 6 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எல்லை பகுதிகள் வழியாக நாட்டுக்குள் தங்கம், போதை பொருள் ஆகியவை கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலை அளித்து வருகிறது.
படத்தையே மிஞ்சும் கடத்தல்:
இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தப்படுவதாக அசாம் காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மணிப்பூரின் காங்போக்பியில் இருந்து அஸ்ஸாமின் கீழ் மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்பட்ட போதைப்பொருளை குறிவைத்து நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது.
குவாஹாட்டியில் உள்ள முர்தாசா அகமது என்பவருக்கு டெலிவரி செய்ய இருந்த இந்த போதைப்பொருள், நேற்று இரவு போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. டாடா நெக்ஸான் காரில் பயணித்தபோது அமிங்கானில் முர்தாசா அகமது கைது செய்யப்பட்டார்.
அதிகாரிகள் ஆய்வு செய்ததில், மொத்தம் 637 கிராம் எடையுள்ள ஹெராயின் நிரப்பப்பட்ட 49 சோப்புப் பெட்டிகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். போதைப்பொருளின் மதிப்பு ₹ 6 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
போலீஸ்க்கு கிடைத்த ரகசிய தகவல்:
முர்தாசா அகமது கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டோக்மோகாவைச் சேர்ந்த டிரக் டிரைவரான பிரசாந்த் டோப்போவை சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்தனர். டோப்போ மணிப்பூரில் இருந்து அவர் ஹெராயின் கடத்தியதாக கூறப்படுகிறது.
சமீபத்தில், தேசிய தலைநகர் டெல்லியில் ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரே நாளில், 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 200 கிலோ கோகோயின் போதைப்பொருளை சிறப்புப் பிரிவு அதிகாரிகள் ரமேஷ் நகரில் பறிமுதல் செய்தனர்.
அதேபோல, மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் அருகே பக்ரோடா தொழில்பேட்டையில் போதைப்பொருள் கும்பலை குஜராத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (NCB) மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) அதிகாரிகள் வளைத்து பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய சோதனையின்போது, சுமார் 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள மெபெட்ரோன் (எம்டி) போதைப் பொருட்களை அதிகாரிகள் மீட்டனர். நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் ஒன்றாக இது பார்க்கப்பட்டது.