அசாம் டாமுல்பூர் தொகுதி வாக்கெடுப்பை நிறுத்த உச்சநீதிமன்றத்தில் மனு
அசாம் டாமுல்பூர் தொகுதி வாக்கெடுப்பை நிறுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அசாம் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக போடோலாந்து மக்கள் முன்னணி மாநில கட்சியின் டாமுல்பூர் சட்டமன்ற வேட்பாளர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்ததையடுத்து, அச்சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் போடோலாந்து கட்சி முறையிட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. போடோலாந்து மக்கள் முன்னணி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது
அஸ்ஸாமில் மார்ச் 27, ஏப்ரல் 1 மற்றும் 6 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. டாமுல்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் 6ம் நடைபெற இருக்கிறது. வேட்புமனுவை வாபஸ் பெற கடைசிநாள் முடிந்த நிலையில், கடந்த ஏப்ரல் 1ம் தேதி தமால்பூர் தொகுதி போடோலாந்து கட்சி வேட்பாளர் ரங்ஜா குங்கூர் பாசுமாடரி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இது, அசாம் அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டாமுல்பூர் தொகுதியில் வாக்குப்பதிவை தள்ளிவைக்க வேண்டும் என்று காங்கிரஸ்,போடோலாந்து மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டன.
அஸாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனாவால் மிரட்டியும், பண பலத்தாலும் வேட்பாளர் விலைக்கு வாங்கி விட்டதாக தங்களது புகார் மனுவில் தெரிவித்தனர். புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
இதற்கிடையே, போடோலாந்து மக்கள் முன்னணி கட்சித் தலைவர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் மனுவை ஒன்றை அளித்தார். அதில்," ரங்ஜா குங்கூர் பாசுமாடரியின் செல்போனை கையகப்படுத்தி விசாரிக்க வேண்டும் என்றும், டாமுல்பூர் தொகுதியில் வாக்குப்பதிவை ஒத்திவைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தேர்தல் செலவுக்கு போதுமான பணம் கொடுக்கவில்லை, எனவே பாஜகவுக்கு மாறினேன் என ரங்ஜா குங்கூர் பாசுமாடரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பின், வேட்புமனுவை ஏன் முன்கூட்டியே வாபஸ் பெற வில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், " அது ஒன்றும் பெரிய விசயமில்லை, சில சட்ட சிக்கல்கள் காரணமாக வாபஸ் பெறவில்லை" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், டாமுல்பூர் தொகுதியில் வாக்குப்பதிவை ஒத்திவைக்க வேண்டும் என்று போடோலாந்து மக்கள் முன்னணி உச்ச நீதிமன்றத்தை இன்று அணுகியது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் ஆறாம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதேநாளில் கேரள மாநில சட்டப்பேரவைக்கும், புதுச்சேரி சட்டப்பேரவைக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.