பரக் அக்ராவல் நியமனத்தைக் கொண்டாடியது போதும்; மாத்தி யோசிங்க: Zoho CEO ஸ்ரீதர் வேம்பு
பரக் அக்ராவல் நியமிக்கப்பட்டதை இந்தியர்கள் கொண்டாடித் தீர்த்துவிட்டனர். அவரின் தேர்வு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே பரக் அக்ராவலின் ஜாதகத்தையே இந்தியர்கள் தேடிப் பிடித்துவிட்டனர்.
ட்விட்டர் சிஇஓவாக இந்தியரான பரக் அக்ராவல் நியமிக்கப்பட்டதை இந்தியர்கள் கொண்டாடித் தீர்த்துவிட்டனர். அவரின் தேர்வு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே பரக் அக்ராவலின் ஜாதகத்தையே இந்தியர்கள் தேடிப் பிடித்துவிட்டனர்.
இந்தியாவிலுள்ள மிக சிறப்பான ஐஐடி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி பாம்பேவில் பரக் அக்ராவல் இளங்கலை பட்டத்தை முடித்தார். அதன்பின்னர் 2011ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழக்கத்தில் கணினி அறிவியியலில் முனைவர் பட்டம் பெற்றார். அந்த சமயத்தில் யாஹூ, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பயிற்சி பெறும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன்பின்னர் 2011-ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தில் விளம்பரம் தொடர்பாக செயல்படும் பொறியியாளராக பணியில் சேர்ந்தார்.
அதன்பின்னர் ட்விட்டர் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவில் பணியாற்றினார். அப்போது ட்விட்டர் தளத்தின் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தியதில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு. குறிப்பாக பயனாளர்களுக்கு ஏற்ப அவர்களுக்கு ட்வீட்களை காட்டும் செயற்கை நுண்ணறிவு திறனை இவர் மேம்படுத்தினார். அது ட்விட்டர் தளம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் கவர்ந்த தளமாக மாற முக்கியமாக உதவி செய்தது.
இந்த துறையில் சிறப்பாக பணி செய்ததன் மூலம் அவர் கடந்த 2018ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பொறுப்பை பெற்றார். அதாவது அந்த நிறுவனத்தின் சிடிஓவாக பதவி உயர்வு பெற்றார். அப்போது முதல் ட்விட்டர் நிறுவனத்தின் சிடிஓ வாக ட்விட்டர் தொழில்நுட்பங்களில் பல முக்கிய விஷயங்களை கொண்டு வருவதில் பெரும் பங்கு வகித்தார்.
தற்போது அதனாலேயே அவர் ட்விட்டர் சிஇஓவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று புட்டுப்புட்டு வைத்துள்ளது. ஆனால், ZOHO நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்புவோ, கொண்டாடியது போதும் மாற்றி யோசியுங்கள் என ட்வீட் செய்துள்ளார். யார் இந்த வேம்பு, ஏன் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஸோஹோ(Zoho) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிதான் இந்த ஸ்ரீதர் வேம்பு.
அவருடைய டீவிட்களின் சாராம்சம் இதுதான்:
பல்வேறு மிகப்பெரிய அமெரிக்க நிறுவனங்களிலும் தற்போது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சிஇஓக்கள் இருக்கின்றனர். அமெரிக்க விவசாயமும் சரி, அமெரிக்க கார்ப்பரேட் உலகமும் சரி தற்போது மண்ணரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், கார்ப்பரேட் உலகு அதற்கு தீர்வாக இறக்குமதி செய்யப்பட்ட மணலை பயன்படுத்துகிறது. 1970களில் வெண்டல் பெர்ரி அமெரிக்காவின் பண்ணைத் தொழிற்சாலைகள் பற்றி விமர்சித்திருந்தார்.
அதில் அவர் இத்தகைய போக்கு மண்ணில் கலாச்சாரத்தையும், நீர் வளத்தையும் அழிக்கும் என்று எச்சரித்திருந்தார். அதேபோல், கார்பரேட் உலகில் மெசர் அண்ட மேனேஜ் உத்தி எடுபடாது. இந்த உத்தி காலாண்டு வருவாயை வேண்டுமானால் கணித்துச் சொல்லலாம் ஆனால் நிர்வாகக் கலாச்சாரம் என்பதை முற்றிலுமாக புறந்தள்ளிவிடும். தி டிரனி ஆஃப் மெட்ரிக்ஸ் என்ற இந்தப் புத்தகத்தில் இதைப் பற்றித் தான் விரிவாகப் பேசியுள்ளனர். அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்போது வேறு கலாச்சாரங்களில் இருந்து தங்களுக்குத் தேவையான திறமையாளர்களை தேர்வு செய்கிறது. அமெரிக்க நிறுவனங்கள் பல இந்தியாவில் கல்வியில் தலைசிறந்து விளங்கியவர்களை ஸ்வீகரித்துக் கொண்டுள்ளது. இந்தியா தனது திறமையாளர்களை ஏற்றுமதி செய்து கொண்டுள்ளது.
இப்போது இந்தியா, தன் நாட்டில் உருவான நிர்வாக குருக்கள் அமெரிக்க பிசினஸ் பள்ளியில் இருந்து கொண்டு வந்த அந்த டாப் சாயில் எரோஸன் உத்தியை பின்பற்றத் தொடங்கிவிட்டது. அதன் விளைவு, அமெரிக்காவில் இருப்பதுவே போலவே மன உறுதியில்லாத ஊழியர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இது மாத்தி யோசிக்க வேண்டிய தருணம் என்று கூறியுள்ளார்.