நான்காவது முறையாக ஆட்டம் காட்டிய அரவிந்த் கெஜ்ரிவால்.. என்ன செய்யபோகிறது ED?
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக நான்காவது முறையாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இந்த முறையும் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகாமல் தவிர்த்துள்ளார்.
மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்துள்ளது. இதில் அதிகம் நெருக்கடிக்கு உள்ளானது ஆம் ஆத்மி கட்சிதான்.
ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கடி தரும் அமலாக்கத்துறை:
பண மோசடி வழக்கில் டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சத்யேந்தர் ஜெயின், டெல்லியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணிஷ் சிசோடியாவை தொடர்ந்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவார் என கடந்த சில நாள்களாகவே தகவல் வெளியான வண்ணம் உள்ளது. ஆனால், இதுவரை அதுபோன்று எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், மூன்று முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
ஆட்டம் காட்டும் அரவிந்த் கெஜ்ரிவால்:
இந்த நிலையில், மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக நான்காவது முறையாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இந்த முறையும் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகாமல் தவிர்த்துள்ளார். இன்று நேரில் வந்து ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், வரவிருக்கும் மக்களவை தேர்தலில் தன்னை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து பேசுகையில், "அமலாக்கத்துறை எனக்கு அனுப்பிய நான்கு நோட்டீஸ்களும் சட்டவிரோதமானது. அது எதுவும் செல்லாது. இதுபோன்று, கடந்த காலத்தில் குறிப்பிட்ட காரணத்தை சொல்லாமல் பொதுவாக அனுப்பப்பட்ட நோட்டீஸை செல்லாது என அறிவித்து அதை நீதிமன்றங்கள் ரத்து செய்துள்ளன. அரசியல் சதியின் ஒரு பகுதியாக இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது" என்றார்.
இதுகுறித்து ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றம்சாட்டவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பிறகு ஏன் சம்மன் அனுப்பி அவரை கைது செய்ய வேண்டும் என்று மிரட்டுகிறார்கள்? ஊழல் அரசியல் தலைவர்கள் பாஜகவில் இணைந்தால், அவர்களின் வழக்குகள் முடிக்கப்படுகின்றன. நாங்கள் எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை. எங்கள் தலைவர்கள் யாரும் பாஜகவில் சேர மாட்டார்கள" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில முதலமைச்சரை கைது செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. பல நடைமுறைகள் உள்ளன. மாநிலத்தின் நிர்வாகமே முடங்க வாய்ப்புள்ளது. அப்படி கைது செய்யப்பட்டால், தனது முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்வாரா? இல்லை அந்த பதவியில் தொடர்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டாலும் அவரே முதலமைச்சராக நீடிக்க வேண்டும் என கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.